பசுப் பாதுகாப்பிற்கான ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற ஆணையத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பசுக்களை பாதுகாக்கவும், அவை கொல்லப்படுவதை தடுக்கவும் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

NPIC

வட இந்தியாவில் பசுக்கள் கொல்லப்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஒருசிலர் கைது செய்யப்பட்டனர். மத்தியபிரதேசத்தில் நேற்றுமுன் தினம் பசுவை படுகொலை செய்ததாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி பாஜகவினர் பசுவதை செய்பவர்கள் மீது அவ்வபோது தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பசுக்களை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிகையை மேம்படுத்தவும், இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும் ’ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்’ என்ற ஆணையத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. தற்போது அந்த ஆணையத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஆணையத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகள் பயனடைவர் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆணையம் கால்நடை மருத்துவம், விலங்குகள் அறிவியல், விவசாய பல்கலைக்கழகம், மத்திய-மாநில அரசுக்களின் இனப்பெருக்கம், உயிர்வாயு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பசுபாதுகாப்பிற்கான சட்டங்களை முறையாக அமல்படுத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு தற்போது நடந்து முடிந்த இடைக்கால பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.