டில்லி:

ராணுவ தொலைதொடர்புக்கு பிரத்யேக ஸ்பெக்டரம் உருவாக்க மேலும் ரூ.11 ஆயிரத்து 330 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவையின் பொருளாதார குழு முடிவின் படி ராணுவ தொலை தொடர்பு ஸ்பெக்டரம் திட்டத்துக்கு ஏற்கனவே 2012ம் ஆண்டு ரூ.13 ஆயிரத்து 334 கொடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ.11 ஆயிரத்து 330 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நெட்ஒர்க் ஃபார் ஸ்பெக்டரம் என்ற என்ஃஎப்எஸ் திட்டம் ராணுவப் படைகளின் தொலைத் தொடர்பு திறன் தேசிய அளவிலான சிறப்பான செயல்பாட்டிற்கு அழைத்துச் செல்லும். 2010ம் ஆண்டிலேயே பயன்பாட்டின் உள்ள 3ஜி ஸ்பெக்டரத்தில் 25 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 2ஜி.யில் உள்ள 20 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்டரம் பயன்பாட்டை காலி செய்ய ராணுவத்துக்கும், தொலைதொடர்பு துறைக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக பிரத்யேக ராணுவ நெட்ஒர்க்கை தொலைதொடர்பு துறை ராணுவ தொலைத்தொடர்பு வசதிக்காக ஏற்படுத்தி தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் செயல்படுத்துகிறது. 24 மாதங்களில் இந்த திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.