ஜிப்மர் – எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளுக்கும் வருகிறது நீட் தேர்வு: சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுவை ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி, சண்டிகாரில் உள்ள உயர் மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர்கள் தேர்வையும் நீட் மூலமாகவே நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நீட் தேர்வு என அழைக்கப்படும் இந்த தேர்வை எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே மாணவர்கள் கல்லூரிகளில் சேர முடியும். அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வு தரவரிசை அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்கின்றனர். அதேபோல் மத்திய அரசுக்கான மருத்துவ ஒதுக்கீட்டுக்கும் நீட் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான புதுவை ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி, சண்டிகாரில் உள்ள உயர் மருத்துவ கல்லூரி ஆகியவற்றுக்கு தனியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த 3 கல்லூரிகளும் தன்னாட்சி கல்லூரிகளாக இருப்பதால் அவை தனியாக நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர்களை தேர்வ செய்கின்றன. ஆனால், இதில் சில தவறுகள் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எனவே, 3 கல்லூரிகளுக்கான மாணவர்கள் தேர்வையும் நீட் மூலமாகவே நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ள நிலையில், அதற்கு அமைச்சரவை தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேசிய மருத்துவ கமி‌ஷன் இதன் சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய உள்ளது. அது நிறைவேற்றப்பட்டதும், ஜிப்மர் உள்ளிட்ட 3 கல்லூரிகளுக்கும் நீட் மூலமாகவே தேர்வை நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி