அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்: முதல்வர்  நாராயணசாமி

 

புதுவை:

 அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டியது அரசியலமைப்பு சட்டப்படி அவசியம் என்றார் புதுவை முதல்வர் நாராயணசாமி.

முதல்வர் நாராயணசாமி தலைமையில், தலைமை செயலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

புதுவை ஆளுநர் - முதல்வர்
புதுவை ஆளுநர் –  புதுவை முதல்வர்

இந்த கூட்டத்தில்,  சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிற அரசு துறைகளை சீரமைக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும், அரசு ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வரவேண்டிய அவசியம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி:

புதுவையில் சட்டம் ஒழுங்கு, அரசு ஊழியர்கள் சம்பந்தபட்ட முடிவு, நிலம் சம்பந்தமான முடிவை எடுப்பதற்கு மாநில அமைச்சரவைக்கு மட்டுமே அதிகாரமுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம், யூனியன் பிரதேச சட்டங்களின் படி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எடுக்கும் முடிவை துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர் நீதிமன்றமாக மாற்ற தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்பதாகவும் நாராயணசாமி கூறினார்.

இதற்கிடையில்,  புதுவை துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டதில் இருந்து, அவர் தன்னிச்சையாக செயல்படுவதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் குற்றங்கள் தடுப்பு, சாலை போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பான வரைவு திட்டங்களை தயாரிக்க தன்னிச்சையாக உத்தரவிட்டது,

முக்கிய பிரமுகர்களுக்காக போக்குவரத்து நிறுத்தப்படாது என்ற அறிவிப்பு,  இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம்  அணிய வேண்டும்,

தினசரி மாலை 5 மணி முதல் 6 மணி வரை ராஜ்நிவாஸில் பொதுமக்கள்  தம்மை நேரில் சந்திக்கலாம்,

என்பது போன்ற அறிவிப்புகளை  அறிவித்து, தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று  அவர்மீது  அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுளை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதல்வர்  நாராயணசாமியின்  பேட்டியும் ஆளுநரின் கடமை என்ன என்பதை சுட்டிக்காட்டுவதாகவே அமைந்துள்ளது.