Random image

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை!: அமைச்சரவை ஒப்புதல்

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால்  தூக்கு தண்டனை வழங்கலாம் என மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை காக்க 2012 ம் வருடம் போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்  பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினால் குறைந்தபட்சம் ஏழு ஆண்டு சிறை தண்டனையும்  அதிகபட்சமாக ஆயுள் தண்டணையாகவும் இருந்தது. மேலும்  அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போக்சோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6 ன் படி குழந்தைகளை  அவர்களது பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர் அல்லது காவல்துறை அதிகாரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருட  சிறை தண்டனையோ அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படுவதாக இருந்தது.

மேலும் போக்சோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தால் குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 வருட  சிறை தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படுவதாக இருந்தது.

இந்நிலையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தில் உள்ள  4,5,6,9,14,15,42 சட்டப்பிரிவுகளில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. . பிரிவு 4,5,6 ஐ திருத்துவதன் மூலம் குழந்தைகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.