டெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா காணொளி காட்சி வழியாக அனைத்து மாநிலத்தலைமைச்செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தொற்று பரவல் மேலும் தீவிரம் அடையாதவாறு, கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,   மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை மாநிலத்தில் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல், அதனால் ஏற்படும்உயிரிழப்புகள் கட்டுக்குள் இருப்பதாக கூறியவர்,  கொரோனா தொற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கு போதுமான சோதனைகள் தொடர வேண்டியது அவசியம். தொற்றை முன்கூட்டியே கண்டறிவதன் மூலமாக சமூகத்தில் கொரோனா பரவலைக் குறைக்க முடியும் என்று வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களும், மாவட்ட ஆட்சியர்களுடன்  டிசம்பர் 6 ஆம் தேதிக்கு முன்னதாக   ஒரு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துமாறும், கொரோனா தடுப்பூசி  சேமித்து வைப்பது மற்றும், முதல்கட்டமாக யார் யாருக்கெல்லாம் தடுப்பூசி போடுவது, அது தொடர்பான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, தடுப்பூசியை அனைத்து மாநிலத்திற்கும் கொண்டு செல்வது உள்ளிட்ட ஒருங்கிணைப்புகளை செய்வதற்கு தயாராகுங்கள் என்று  அறிவுரை கூறியதாகவும், . குறிப்பிட்ட மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களுடன் வெளிப்படையான தகவல்தொடர்புடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தடுப்பூசியை விரைவாகவும், திறம்படவும் விநியோகிப்பதற்கான வழிமுறைகளை, மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், முன்னுரிமை பட்டியலை தயாரிக்கவும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.