சென்னை:

டிராய் அறிவித்துள்ள  கேபிள் டிவி கட்டண உயர்வை எதிர்த்து, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நாளை போராட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக  கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தப் படும் என தமிழக கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், நாளை ஒளிபரப்பு சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அதிரடியாக கட்டண உயர்வை அறிவித்து உள்ளது. அதன்படி தொலைக் காட்சி பார்க்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நெட்வொர்க் கெபாசிடி கட்டணமாக 130 ரூபாய் உடன்  18 சதவிகித ஜிஎஸ்டி வரியான 23 ரூபாய் 40 பைசாவுடன் சேர்த்து மொத்தம் 153 ரூபாய் 40 பைசா செலுத்த வேண்டும் என்றும், அதுபோல கட்டணச் சேனல்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்து இருந்தது.

இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், டிராய் அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், டிராய் அறிவிப் புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்து உள்ளது.

டிவி ஒளிபரப்பு கட்ட உயர்வு தொடர்பாக  டிராய், அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும், இதன்மீதான  ஜிஎஸ்டியை ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாளை ( 24-ம் தேதி)  காலை ஆறு மணி முதல் இரவு 10 மணி போராட்டம் நடைபெறும் என்றும், இந்த சமயத்தில் கேபிள் சேவை நிறுத்தப்படும் என்றும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழகத்தில் சுமார் 29 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்கள் பங்குபெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.