போபால்

த்தியப் பிரதேச மாநிலத்தில் செயலி மூலம் இயங்கும் வாடகைக்  கார் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் மொபைல் செயலி மூலம் வாடகை வாகனங்கள் ஒப்பந்தம் செய்வது அதிகரித்துள்ளது. ஓலா, உபேர் போன்ற பல வாடகை வாகன  நிறுவனங்கள் மொபைல் செயலி மூலம் மட்டுமே இயங்கி வருகின்றன.  இந்த வாகனங்கள் அபரிமிதமான கட்டணங்கள் வாங்குவதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓலா நிறுவனத்தின் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

அதில் முக்கியமானவை இந்த நிறுவனத்தின் நெரிசல் நேரக் கட்டணம் 6 முதல் பத்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும், ஓட்டுநர் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தாலும் ரத்துக் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்குவதாகவும் புகார்கள் எழுந்தன. உபேர் நிறுவனம் முன்பு போபால் போக்குவரத்துத் துறையிடம் இருந்து அனுமதி பெறாமல் சேவையைத் தொடங்கியதாகப் புகார்கள் வந்திருந்தன.

மத்தியப் பிரதேசத்தில் இயங்கி வரும் மற்ற தனியார் வாடகைக் கார் நிறுவனங்களான ‘மை கேப் மற்றும் ’கிதார்’ஆகியவற்றின் மீதும் இதே  புகார்கள் அளிகக்பட்டுள்ளன. இவையும் மொபைல் செயலி மூலம் ஒப்பந்தம் செய்யப்படுபவை ஆகும். இவை யாவும் மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிராகும். எனவே இது குறித்து அரசு தீவிர ஆலோசனை நடத்தியது.

இது குறித்து ம பி போக்குவரத்துத் துறை அமைச்சர் பூபேந்திர சிங், “செயலி மூலம் இயங்கி வரும் பல வாடகைக் கார் நிறுவனங்கள் மோட்டார் வாகன சட்டத்தை மீறி அதிகக் கட்டணம் வசூலிப்பதால் இந்த நிறுவனங்களின் சேவை மாநிலத்தில் தடை செய்யப்பட உள்ளது. இந்த நிறுவனங்களை ஒழுங்கு படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனால் அரசின் எச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நிறுவனங்கள் மதிக்கவில்லை. எனவே இந்த நிறுவனங்களில் சேவைகளை ரத்து செய்ய அரசு முடிவு செய்தது. இதற்கான உத்தரவு விரைவில் அந்த  நிறுவனங்களுக்கு அனுப்பப்பட உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.