பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தனிக்கை செய்ய ஆணையம் மறுப்பு

டில்லி

ணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிக்கையை தணிக்கை செய்ய மத்திய கணக்கு தணிக்கை ஆணையம் மறுத்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இரவில் அறிவித்தார். அந்த நடவடிக்கையால் உயர்மதிப்பு நோட்டுக்கள் செல்லாமல் போனதால் மக்கள் பெரிதும் துயருற்றனர். நோட்டுக்க்ளை மாற்ற கியூவில் நின்ற போது ஒரு சிலர் மரணம் அடைந்த தகவலும் வந்தது.

இது குறித்து மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பல சமாதானங்களை சொல்லிய போதிலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் மத்திய கணக்கு தணிக்கை ஆணயம் இந்த அறிக்கையை தணிக்கை செய்ய உள்ளதால் அந்த அறிக்கை வந்த பிறகு இந்த நடவடிக்கைக்கான உண்மைக் காரணங்கள் தெரிய வரும் என சொல்லப்பட்டது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த அறிக்கை இரு வருடங்கள் ஆகியும் வெளி வராமல் இருந்தது. இது குறித்து கேட்ட போது தணிக்கை அறிக்கை விரைவில் வெளியாகும் என ஆணயம் தெரிவித்தது, இந்நிலையில் மத்திய கணக்கு தணிக்கை ஆணையம் நேற்று முன் தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், “அதிக மதிப்பிலான நோட்டுக்களை திரும்பப் பெறுவது என்னும் முடிவு ரிசர்வ் வங்கி தொடர்பானது. ஆணயம் எப்போதும் ரிசர்வ் வங்கி மற்றும் உள்ள வங்கிகளின் அறிக்கையை தணிக்கை செய்வது இல்லை. ஆகவே நாங்கள் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தணிக்கை செய்யப் போவதில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரஃபேல் ஒப்பந்தம், பணமதிப்பிழப்பு ஆகிய முக்கியமான விவகாரங்களில் மத்திய கணக்கு தணிக்கை ஆணையத்தின் அறிக்கையை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிக்கையை தணிக்கை செய்ய ஆணையம் மறுத்துள்ளது.

இது குறித்து மத்திய கணக்கு தணிக்கை ஆணையத்துக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகரி ஜுலியோ ரிபெரியோ எழுதிய கடிதத்தில், “பணமதிப்பிழப்பு என்பது நாட்டின் பொருளாதாரம் குறித்த அறிக்கை என்பதால் அதை தணிக்கை செய்ய மறுப்பது தவறு. அத்துடன் ரஃபேல் தணிக்கை அறிக்கையும் வரும் 2019 பொதுத் தேர்தல் முடிவுகள் வரும் வரை அளிக்கப்பட மாட்டாது என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஆணயம் உடனடியாக பதில் அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.