புதுடெல்லி: பாதுகாப்புத் துறை தொடர்பான கொள்முதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான தனது செயல்பாட்டு தணிக்கை அறிக்கையை, மத்திய தலைமை தணிக்கையாளர், மத்திய அரசிடம் சமர்ப்பித்து 8 மாதங்கள் ஆன நிலையில், அதில் ரஃபேல் விமானங்கள் தொடர்பான எதுவும் இடம்பெறவில்லை என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த தணிக்கை அறிக்கையை இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை மோடி அரசு.

இதுதொடர்பாக மேலும் கூறப்படுவதாவது; ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் கொள்முதல் தொடர்பான எந்த தகவலையும், தல‍ைமை தணிக்கையாளருக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கவில்லை. ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள பிரெஞ்சு நிறுவனமான ‘டசால்ட் ஏவியேஷன்’, ஒப்பந்தம் முடிந்த 3 ஆண்டுகள் கழித்தப் பின்னரே எந்த விபரங்களையும் வெளியிடும் விதிமுறை கொண்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தலைமை தணிக்கையாளருக்கு தெரிவிக்கப்பட்டது.

தற்போது முதல் தவணையாக 5 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்துள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் அரசிடம் சிஏஜி சமர்ப்பித்த தணிக்கை அறிக்கையில், அதுவரை 12 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மட்டுமே தணிக்கை செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரெஞ்சு நிறுவனத்திடமிருந்து அந்தக் காலக்கட்டம் வரை எந்த விபரமும் பகிரப்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் கூறப்பட்டது என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஃபேல் தொடர்பான கேள்விகள் எழும்போதெல்லாம், பிரெஞ்சு நிறுவனத்தின் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்கிறது மோடி அரசு என்ற விமர்சனங்கள் எழாமல் இல்லை.