டில்லி:

ஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய தணிக்கை குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை முற்றிலும் பொய்யானது என்று காங்கிரஸ் தலைமை விமர்சித்து உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜித்வாலா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மேற்கொண்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மேற்கொண்ட ஒப்பந்தம் 9 முதல் 20 சதவீதம் வரை மலிவானது என்று தெரிவித்து வந்தனர்.

ஆனால், அவர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கொண்ட ஒப்பந்தம் வெறும் 2.86 சதவீதம் மட்டுமே மலிவானது என்று சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில், ரஃபேல் போர் விமானத்தின் விலை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும், முக்கியமான சில தகவல்கள் சிஏஜி அறிக்கையில் விடு பட்டுள்ளன.

ஒப்பந்தத்தின் மொத்த தொகையில் 10 சதவீதம், செயல்திறன் உத்தரவாதத் தொகையாக டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் செலுத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இத்தொகை அந்நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபமென சிஏஜி அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. ஆனால், போர் விமான ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பைக் கணக்கிடுகையில், இந்தத் தொகை கணக்கில் கொள்ளப்படவில்லை.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், 126 போர் விமானங்களைத் தொழில் நுட்பப் பரிமாற்றத்துடன் சேர்த்து ரூ.11,198 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் ஒரு போர் விமானத்தின் விலை சுமார் ரூ.88.81 கோடியாக இருந்தது.

ஆனால், தற்போது 36 போர் விமானங்களைத் தொழில்நுட்பப் பரிமாற்றம் இல்லாமல் ரூ.10,398 கோடிக்கு வாங்க பாஜக ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஒரு போர் விமானத்துக்கான விலை சுமார் ரூ.288 கோடி ஆகும்.

போர் விமானத்தின் விலை 300 சதவீதம் உயர்ந்துள்ளதாக சிஏஜியின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள போதிலும், தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கான விலை கணக்கில் கொள்ளப்படவில்லை.

எனவே, அறிக்கை வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் நிலையான விலைக்கு போர் விமானங்களை அளிக்க ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஆனால், பாஜக ஆட்சியில், நிறுவனத்தின் லாபத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில், போர் விமானத்தின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது.

இதனால், மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் வெளிநாட்டு நிறுவனத்துக்குச் செல்ல பாஜக துணைபுரிந்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை அடகு வைக்க முற்பட்ட பாஜக, இந்தக் குளறுபடிகளைக் கவனிப்பதில் தோல்வியைத் தழுவியுள்ளது.

சிஏஜியின் அறிக்கையும் முற்றிலும் பொய்யாகத் தயாரிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.