டில்லி

த்திய கணக்கு தணிக்கையாளரின் மத்திய அரசு நிதி மேலாண்மை குறித்த அறிக்கைகள் 75% குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மத்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் அரசைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பாக உள்ளது.  இந்த அமைப்பு மத்திய அரசின் நிதி நிலை, செயல்பாடு மற்றும் ஒப்பீடுகள் குறித்து அறிக்கைகள் அளித்து வருகிறது.   இந்த அமைப்பு அரசு தலையிட முடியாத சுயாட்சி அமைப்பாகும்.   இந்த அமைப்பின் ஆய்வறிக்கைகள் அரசின் பல விவரங்களை வெளிக் கொணர்ந்துள்ளன.

குறிப்பாக 2 ஜி ஏலம், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி முறைகேடு உள்ளிட்டவற்றை வெளிக் கொணர்ந்தது மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கைகள் ஆகும்.  ஆனால் தகவல் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பட்ட விவரங்களின் படி இந்த அமைப்பின் பாதுகாப்புத்துறை அறிக்கைகள் கடந்த சில வருடங்களாக குறைந்த அளவில் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக மத்திய நிதி மேலாண்மை குறித்த அறிக்கைகளும் குறைவாகத் தாக்கல் செய்யப்படுவதும் தற்போது தெரிய வந்துள்ளது.  கடந்த 2015 ஆம் வருடம் மத்திய அரசின் நிதி மேலாண்மை குறித்து மத்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் 55 அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளது.  ஆனால் அது 2020 ஆம் வருடம் 14 ஆகக் குறைந்துள்ளது.   அதாவது இது 75% குறைவு எனத் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கிடைத்த விவரங்கள் தெரிவிக்கின்றன.