புதுடெல்லி:

95 சதவீத ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வருமான வரி செலுத்தும் வட்டத்துக்குள் வரவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது.


மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கையின் விவரம்:

நிறுவனங்கள் தொடங்கும்போது அவற்றின் அனைத்து விவரங்களையும் கம்பெனிகளின் பதிவாளர் பராமரிக்கிறார். பதிவு செய்த நிறுவனங்கள் கம்பெனிகளின் பதிவாளரிடம் ஆண்டுதோறும் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது பான் கார்டு விவரங்களையும் அவசியம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விவரங்களை 12 மாநிலங்களைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மட்டும தந்துள்ளன.

54,578 ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், 51,670 (95 சதவீதம்) ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பான் கார்டு விவரத்தை தாக்கல் செய்யவில்லை.
வருமான வரித் தாக்கலுக்கும் கம்பெனிகளின் பதிவாளருக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

எனவே நிறுவனத்தை புதிதாக பதிவு செய்யும்போதே, கம்பெனிகளின் பதிவாளர் அலுவலகத்தில் பான் கார்டையும் இணைத்துத் தர மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியமும், கார்பரேட் நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகமும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் பான் கார்டு பெறும்போது, கம்பெனி பதிவாளர்களின் பதிவேட்டில் விவரங்கள் தானாகவே சென்றடையும் வகையில் அப்டேட் செய்ய வேண்டும்.

கம்பெனிகளின் பதிவாளரிடம் வருடாந்திர அறிக்கையை நிறுவனங்கள் தாக்கல் செய்யும்போது, வருமான வரி தாக்கல் செய்ததற்கான நகல் பிரதி ஒன்றையும் இணைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருமான வரி தாக்கல் செய்தபின் 6,093.71 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 7 சதவீத ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.

இந்த விசயத்தில் வருமான வரித்துறையும் கவனத்துடன் செயல்பட வேண்டும். தவறு எங்கு நடக்கிறது என்பதை அவர்கள் கண்டறிய வேண்டும்.
இவ்வாறு மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.