கட்டணம் உயர்த்தப்பட்ட அளவுக்கு வசதிகள் இல்லை : ரயில்வே மீது கணக்கு தணிக்கைக் குழு குற்றச்சாட்டு

டில்லி

பிரிமியர் ரெயில்களில் கட்டணம் உயர்த்தப்பட்ட அளவுக்கு பயணிகளுக்கான வசதிகள் அளிக்கப்படுவதில்லை என கணக்கு தணிக்கைக் குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

பிரிமியர் ரெயில்கள் என அழைக்கப்படும் ராஜதானி, டொரொண்டோ மற்றும் ஷதாப்தி ரெயில்களில் கடந்த 2016ஆம் வருடம் செப்டம்பர் மாதம் முதல் கட்டண விகிதங்கள் மாற்றப்பட்டன.   அதன்படி டிக்கட்டுகள் விற்பனை அதிகரிக்கும் போது ஒவ்வொரு 10%க்கும் விலைகளும் 10%  உயரும்.

அதாவது முதல் 10% டிக்கட் ரூ. 100 ஆக இருந்தால் அடுத்த 10%  ரூ.110 ஆக உயரும்.   அதற்கு அடுத்த 10% ரூ. 121 ஆகும்.   இது போல மூன்றாம் வகுப்பு ஏசி டிக்கட்டுக்களுக்கு 140% வரையும் மற்ற வகுப்புகளுக்கு 150% வரையும் உயரும்.  இந்த புதிய கட்டண விகிதங்கள் குறித்து ரெயில்  பயணிகளிடம் கணக்கு தணிக்கை துறை ஒரு ஆய்வை நடத்தியது.

அந்த ஆய்வறிக்கையில், “இந்த ஆய்வு கடந்த 2017 ஏப்ரல் முதல் மே வரை 806 பயணிகளிடம் நடத்தப்பட்டது.  பெரும்பாலான பயணிகள் கட்டண உயர்வுக்கு ஏற்றபடி ரெயிலில் எந்த ஒரு வசதியும் இல்லை என தெரிவித்துள்ளனர்.  எந்த ஒரு ரெயிலும் நேரத்துக்கு கிளம்பி நேரத்துக்கு சென்றடைவதே கிடையாது எனவும் கூறி உள்ளனர்.

ரெயிலில் வழங்கப்படும் உணவு மிகவும் மோசமாக இருப்பதாகவும்  ரெயில் பெட்டிகளில் சுகாதார நடவடிக்கைகள் சரிவர இல்லை எனவும் பயனிகள் தெரிவித்துள்ளனர்.   பயணிகளில் பலர் இதே கட்டணத்தில் பஸ் அல்லது விமானத்தில் இன்னும் சௌகரியமாக செல்ல இயலும் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அங்கீகரிக்கப் படாத  வியாபாரிகளின் தொல்லை, ரெயில் நிலையங்களில் சுத்தமின்மை, உணவு அளிக்கும் ஊழியர்களின் அலட்சிய நடத்தை, மொபைல் மற்றும் லாப்டாப் சார்ஜிங் பிளக்குகள் பற்றாக்குறை,  ரெயிலின் ஜன்னல்களில் உள்ள அழுக்கு போன்றவை குறித்தும் ஏராளமான பயணிகள் குறை கூறி உள்ளனர்.

இதை உடனடியாக ரெயில்வே நிர்வாகம் மாற்றி அமைக்க வேண்டும்.   பயணிகள் செலுத்தும் கட்டணங்களுக்கு ஏற்ப வசதிகள் அமைய வேண்டும்.  இல்லை எனில் அவர்கள் ரெயிலை விடுத்து வேறு வழிகளில் தங்கள் பயணத்தை செய்வார்கள்.   அத்துடன் உடனடியாக இந்த நடவடிக்கையில் ரெயில்வே ஈடுபட்டால் இன்னும் அதிக பயணிகள் வரவும் வாய்ப்புள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.