பொதுவாக எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்துபவர்கள் கூறும் முக்கிய ஆலோசனை – பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள் என்பதுதான். பொதுப்போக்குவரத்து என்பது சிற்றுந்து, பேருந்து, ரயில், மெட்ரோ, எம்.ஆர்.டிபி போன்றவை. ஆனால், நடுத்தர மக்கள் அவசரத்துக்கு ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றையே பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். ‘பிரசவத்துக்கு இலவசம்’ என ஆட்டோக்கள் தங்கள் முதுகில் எழுதி ஒட்டிக்கொள்ள வேண்டிய நிலைமைதான்.
ஆனால் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் பொதுமக்களுக்குமான உறவு எந்த நிலையில் இருக்கிறது? யார் பெரிய கொள்ளைக்காரன் என்று பத்து பேரிடம் இக் கேள்வியைக் கேட்டால் ஒன்பது பேர் ஆட்டோ ஓட்டுனரைத்தான் கூறுவோம்.
மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்ல ஆட்டோ கேட்டால், திருவான்மியூர் போகலாமென்றால் சொல்லுங்கள் வருகிறேன் என்பார் ஆட்டோக்காரர். அல்லது நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு நூறு ரூபாய்கூட கேட்பார். இதெல்லாம் பெரும் கொள்ளையாக நமக்குத் தெரியும். அனால் அதன் பின்னே பல பிரச்சனைகள் இருக்கின்றன.
ஆட்டோக்காரர்கள் நியாயமான கட்டனம் வசூலிப்பதை மட்டும் எதிர்பார்ப்போம். ஆனால் அவர்கள் பிரச்சனைகள் குறித்து நாம் கவலைப்படுவதில்லை.
taxi
இந்த நிலையில் ஆபத் பாந்தவனாக வந்ததுதான் கால் டாக்சி. அவசரமாக ரயிலைப் பிடிக்க 15 கிமீ தொலைவில் உள்ள ரயில் நிலையத்துக்கு ஆட்டோவுக்கு முன்னூறு கொடுத்துக்கொண்டிருந்த நாம், கால் டாக்சிக்கு ஒரே ஒரு போன் செய்தால் போதும், குளிர்சாதனம் பொருத்தப்பட்ட கார் வீட்டுவாசலில் வந்து நம்மை ஏற்றிக்கொண்டு சொகுசாக ரயில் நிலையத்தில் இறக்கிவிடும், கட்டணம் 150 முதல் 200க்குள்தான் இருக்கும். கால் டாக்சி நடுத்தர மக்களின் வரப்பிரசாதமாக மாறியது.
ஆனால், 2011 ஆம் ஆண்டு டெல்லியில் உபேர் டாக்சியில் பயணம் செய்த ஒரு பெண் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவ் குமார் யாதவ் ஏற்கனவே பல கொலைகள் செய்துள்ள ஒரு சங்கிலித் தொடர் கொலைகாரன் என்பது தெரியவந்தது. இத்தகைய குற்றச்செயல்களை விசாரிக்காமல் சேர்த்துக்கொண்ட உபேர் நிறுவனம் மீது கடும் புகார் கூறப்பட்டது.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான உபேர் இத் தொழிலில் ஏகபோக நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் மதிப்பு பல லட்சம் கோடி ரூபாயாகும். 2015ம் ஆண்டில் அதன் விற்பனை வருவாய் ஆயிரம் கோடி டாலர்களுக்கும் அதிகமாகும். இந்தியாவில் கால் டாக்சி தொழிலின் மதிப்பு ஒரு லட்சம்கோடி ரூபாய் என்பதை அறிந்து டெல்லியில் 2011ல் கால் பதித்தது.
கோடிகளைக் குறிவைக்கும் கார்ப்பரேட்டுகள் தாங்கள் நியமிக்கும் ஓட்டுனர்கள் குறித்து விசாரிப்பதில்லை. இதன் விளைவுதான் ஒரு சீரியல் கில்லர் போன்ற பழைய கிரிமினல்களும் கால் டாக்சி டிரைவராக முடிகிறது.
இங்குமட்டுமல்ல, உபேர் கிளை பரப்பியுள்ள அனைத்து நாடுகளிலும் இக் குற்றச்சாட்டு உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவில் ஒரு பெண்பயணி சற்று போதையில் இருக்கிறார் என்பது தெரிந்து  அவரை ஏமாற்றி ஒரு ஹோட்டலுக்குக் கடத்திச்சென்ற உபேர் ஓட்டுநர் காவல்துறையிடம் பிடிபட்டார்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு மற்றொரு லாஸ் ஏஞ்சல்ஸ் பெண்பயணியை உபேர் ஓட்டுநர் 36 கீமீ தூரம் கடத்திச் சென்று ஆளில்லாத பார்க்கிங் லாட்டில் தமது ஆசைக்கு இணங்குமாறு துன்புறுத்தியுள்ளார்.
நியூயார்க் நகரில் உபேர் கால் டாக்சியில் பயணித்த ஒருவர் கார் செல்லும் திசை குறித்து சந்தேகம் எழுப்ப, ஓட்டுநர் ஒரு சுத்தியலால் அந்தப் பயணியின் மண்டையை உடைத்து விட்டார்.
டெல்லியில் உபேர் தடை செய்யப்பட்ட அதேநாளில்தான் (2014 டிசம்பர் 8) நெதர்லாந்து நாட்டிலும் உபேர் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உபேர், ஓலா ஆகிய இரண்டு கால் டாக்சி நிறுவனங்களே ஏகபோக ஆதிக்கம் செலுத்துகின்றன. உபேர் பன்னாட்டு நிறுவனம் என்றால் ஓலா இந்திய நிறுவனம் ஆகும்.
சென்னையும் தப்பிக்க வில்லை. இம்முறை புகார் ஓலா மீது. அண்மையில் ஓலா கால் டாக்சியில் ஒரு பெண் இரவில் பயணம் செய்யும்போது ஓவர்ஸ்பீட் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி அப் பெண்ணின்  ’கழுத்தை அறுத்துருவேன்’ என்று ஓட்டுனர் மிரட்ட, அதுவே அவரை சிறைக்குத் தள்ளியது. அனேகமாக, ஓவர்ஸ்பீடுக்காகவும் பெண்ணிடம் வன்முறையாகப் பேசியதற்காகவும் மட்டும் சிறைக்கம்பி எண்ணியவர் அந்த ஓட்டுனராகத்தான் இருப்பார். முதல் காரணம்  சுவாதி கொலை அப்போதுதான் நடந்திருந்தது. பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் பயணிகள் முன்னிலையில் ஒரு பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சில தினங்களில் இந்த மிரட்டல் மிகவும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். அப்பெண் துணிச்சலுடன் புகார் செய்ததுடன் பத்திரிகையிலும் செய்தி கொடுத்தார்.
ஆனால், அவர் ஓட்டுனருக்கு கட்டணம் தராதத்துக்காக தொழிலாளர் வர்க்க சிந்தாந்தந்தைக் கையில் எடுத்துக்கொண்டு அப் பெண்ணை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கிறார்கள் ஆணாதிக்கக் காதலர்கள்.
இவர்கள் ஒரு நாளாவது ஆட்டா தொழிலாளர்கள், டாக்சி தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்தும் கோரிக்கைகள் குறித்தும் சிந்தித்திருப்பார்களா? தெரியவில்லை.
ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. ஆட்டோக்களில் ஜிபிஎஸ் மீட்டர் பொறுத்தப்படும் என்று அரசு வாக்குறுதி அளித்தும் பல ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் ஒரு ஆட்டோவுக்குக்கூட மீட்டர் பொறுத்தப்படவில்லை. எல்லாவற்றையும் விட காவல்துறையின் பிடியில் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்பதுதான் ஆட்டோ தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கை. அது மட்டுமல்லாமல் பல பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொண்டு கீழ் நடுத்தர வாழ்க்கையே வாழும் அவர்களுக்கு எந்த சமூக பாதுகாப்பும் கிடையாது. குறைந்த பட்சம் மருத்துவக் காப்பீடுகூட கிடையாது. ஒரு கோடி ரூபாய் சொகுசுக் காரில் செல்வோருக்கும் மூன்று வேளைக் கஞ்சிக்காக ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் தொழிலாளிக்கும் பெட்ரோல் ஒரே விலை.
அதே போல கால் டாக்சியிலும் பல பிரச்சனைகள் உள்ளன.  ஒரு ஓட்டுனர் ஒரு நாளைக்கு எந்த புகாரும் இல்லாமல் 15 சாவாரிகள் ஓட்ட வேண்டும், மாலை 4 மணியில் இருந்து இரவு 11 மணிக்குள் மட்டும் கட்டாயம் 5 சவாரிகள் ஓட்ட வேண்டும். இப்படிப் பல நிபந்தனைகள். இவற்றை நிறைவு செய்யாவிட்டால் அதற்கேற்பப் பிடித்தம் செய்யப்படும் நிலை. சென்னையின் போக்குவரத்து நெரிசல், தூரம், அடுத்தடுத்து சவாரி கிடைக்கும் வாய்ப்புகள் என பல பிரச்சனைகளால் இந்த நிபந்தனைகளை வாரத்தில் இரண்டு நாட்கள் கூட நிறைவேற்ற முடிவதில்லை என்கிறார்கள் கால் டாக்சி ஓட்டுனர்கள். அதுமட்டுமல்லாமல் கால் டாச்சி நிறுவனங்கள் தங்கள் ஓட்டுனருக்கு என்ன பாதுகாப்பு தருகின்றன. விபத்து நடந்தாலோ, ஏன் பயணிகளால் ஆபத்து வந்தாலும் கூட பாதுகாப்பு கிடையாது.
ஐந்து லட்சம் போட்டு சொந்தக் கார் வாங்கித்தான் ஓட்டுகிறார்கள். ஆனால் அவர்களது மாத வருமானத்தைக் கணக்கிட்டால் சோகம்தான்.
ஆனால், சில கோடி ரூபாய் மதிப்புள்ள டாக்சி பார் ஷூர் என்ற முன்னணி கால் டாக்சி நிறுவனத்தை சில மாதங்கள் 1200 கோடி ரூபாய் கொடுத்து ஓலா நிறுவனம் வாங்குகியது. ஆனால் அதே டாக்சி பார் ஷூர் நிறுவனத்தை நேற்று ஓலா மூடிவிட்டது. ஆயிரத்துக்கும் அதிகமான டாக்சி தொழிலாளர்கள் தெருவுக்கு வந்துள்ளனர்.
ஆட்டோ தொழிலாளர்கள் ஒரு பக்கம் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடுவது போலவே கால்டாக்சி தொழிலாளர்களும் மேற்சொன்ன பிரச்சனைகளுக்காகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இப் போராட்டங்களுக்கு இந்த ஆணாதிக்கக் காதலர்களில் எத்தனை பேர் தங்கள் ஆதரவினைத் தெரிவித்துள்ளனர் என்று தெரியவில்லை.
பொதுப் போக்குவரத்து பலமாகவும் பாதுகாப்பாகவும் இல்லாததும் முக்கியக் காரணம்.  இவர்கள் என்றைக்காவது பொதுப்போக்குவரத்தின் அவசியம் குறித்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறார்களா?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கும் ஒருவருக்கு பெட்ரோல் மானியம் எதற்கு என என்றைக்காவது கேள்வி கேட்டிருப்பார்களா?
கடைசியாக, கால் டாக்சி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையில்தான் கால் டாக்சியில் பயணிக்கிறோம். ஆனால், பயணிகளின் பாதுகாப்புக்கு இந்த கால் டாக்சி நிறுவனங்கள் என்ன உத்தரவாதம் தருகிறது என்ற கேள்வியும் எழுகிறது.
(கட்டுரையாளர் தொடர்புக்கு jeon08@gmail.com https://www.facebook.com/appsmoo )