மனாமா:

வளர்ச்சி பாதையில் இருந்து விலகிச் செல்லும் இந்தியாவை மீட்டெடுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உதவ வேண்டும் என்று ராகுல்காந்தி கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக பதவி ஏற்ற பின் முதன்முறையாக ராகுல்காந்தி பக்ரைன் சென்றார். அங்கு இந்தியா வம்சாவளி மக்களுக்கான உலகளாவிய அமைப்பின் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசுகையில், ‘‘ நான் இங்கு வந்தது பெருமையாக இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது ஒரு கெமிஸ்ட்ரி ஆசிரியர் இருந்தார். அவர் பக்ரைனில் பணியாற்றினார்.

ஒரு நாள் பக்ரைன் சென்று அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்து வர வேண்டும் என்று அவர் தொடர்ந்து என்னிடம் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். பக்ரைன் கட்டுமானத்தில் இந்தியர்கள் பெரும் பங்காற்றுகின்றனர். பக்ரைன் மக்களுடன் இணைந்து இந்தியர்கள் இந்த கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.

‘‘ஒரு சிறு கதையுடன் எனது உரையை தொடங்குகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் உ.பி. மாநிலத்தில் பயணம் மேற்கொண்டிருந்தேன். அப்போது மார்க்கெட்டில் இருந்து ஒரு பெண் ஓடி வந்தார். அவர் என்னிடம், எனது வாழ்க்கையை அழித்துவிட்டனர் என்றார்.

யார்? என்று கேட்டேன். போலீஸ்காரர்கள் என்றார். ஏன்? என்று கேட்டேன். எனது கணவர் மீது 302வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துவிட்டனர் என்றார். 302வது பிரிவு கொலை வழக்கு என்பது கூட அறியாத நிலை உள்ளது. உ.பி.யில் பலர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. அதனால் பொய் வழக்கு குறித்து தான் அந்த பெண் கூறுகிறார் என்று உணர்ந்தேன்.

அப்போது எனது அருகில் ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார். அவரிடம், ஏன் பொய் வழக்குப் பதிவு செய்தீர்கள். இந்த விஷயத்தில் தலையிட்டு என்ன நடந்தது என்பதை விசாரித்து எனக்கு கூற முடியுமா? என்று கேட்டேன். அதற்கு அந்த போலீஸ்காரர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். உ.பி.யில் அனைத்தும் சந்தேகம் தான் என்பதை உணர்ந்தேன். அதனால் தான் அவர் என்னையும் சந்தேகமாக பார்த்தார்.

பின்னர் நான் அந்த பெண்ணிடம் பேசினேன். உன் கணவர் யாரையும் கொலை செய்துள்ளாரா? என்று கேட்டேன். அதற்கு அந்த பெண் ஆமாம் என்றார். கொலை செய்தவரை எப்படி காப்பாற்றும்படி என்னிடம் கூறுகிறாய்? என்று கேட்டேன். இதை கூட அரசியல்வாதிகளால் செய்ய முடியாதா? என்று அந்த பெண் திருப்பி கேட்டார். இது போன்ற எதிர்பார்ப்புகள் தான் அங்கு நிலவுகிறது’’ என்றார் ராகுல்காந்தி.

மேலும், அவர் பேசுகையில், ‘‘இந்த சூழ்நிலையில் தான் நான் தற்போது பக்ரைனில் நிற்கிறேனன். அனைத்து மத, சமூக மக்களையும் ஒன்றிணைப்பதற்காக பிறந்தது தான் காங்கிரஸ். ஆரம்பம் முதலே இது தான் எங்களது இலக்கு. உங்களது சொந்த நாடு தற்போது பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது.

இதற்கு நீங்கள் உதவ வேண்டும். பக்ரைன் மட்டுமல்ல உலகில் எங்கு நீங்கள் இருந்தாலும் அதற்கு ஏற்ற பாலத்தை அமைத்து கொடுக்க வேண்டியது எனது பொறுப்பு. சுதந்திர போராட்டத்தில் வெளிநாட்டு வாழ் இ ந்தியர்கள் தான் வலுவான வேராக இருந்தனர். மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்களும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாக இருந்தவர்கள் தான் என்பதை மறந்து விடக் கூடாது. ஆனால் மக்கள் இதை மறந்துவிட்டார்கள்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால், தற்போது மீண்டும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. முதல் பிரச்னை வேலையில்லா திண்டாட்டம். இந்திய மக்களுக்கு போதுமான வேலை வாய்ப்பை உருவாக்கி தர அரசு தவறிவிட்டது. இந்தியாவின் முக்கிய போட்டியாளரான சீனா 24 மணி நேரத்திற்கு 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இதே நேரத்தில் இந்தியா 400 வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கி வருகிறது.

சீனா 2 நாட்களில் செய்யும் ஒரு வேலையை இந்தியா ஒரு ஆண்டில் செய்யும் நிலை உள்ளது. இவை அனைத்தும் எனது புள்ளி விபரங்கள் கிடையாது. இந்திய அரசு அளித்துள்ள புள்ளி விபரங்கள் தான். 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல் குறைந்துள்ளது. 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதலீடு குறைந்துள்ளது. 63 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வங்கிகளின் கடன் வளர்ச்சி குறைந்துள்ளது’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘பணமதிப்பிழப்பு அறிவிப்பால் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மக்கள் இழந்துள்ளனர். இதனால் பொருளாதார வளர்ச்சி பாதித்துள்ளது. இதை ஏற்றுக் கொள்ளாத நிலை தான் இந்தியாவில் நிலவுகிறது. ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் புதிய இளைஞர்கள் வேலைவாய்ப்பு சந்தைக்குள் வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்காததால் இளைஞர்கள் பேரிடரை சந்தித்து வருகின்றனர். அரசின் இந்த மெத்தன போக்கால் மக்களின் ஆத்திரத்தை இந்திய தெருக்களில் வெளிப்படையாக காண முடிகிறது. எதிர்காலத்தில் நாங்கள் என்ன செய்வோம்? என்று இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுபோன்ற பேரழிவில் இருந்து மக்களை திசை திருப்பும் வகையில் வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், உலகத் தர கல்வி திட்டம் வடிவமைப்பு என்று அறிவிக்கப்படுகிறது. வெறுப்பு மற்றும் பிரிவினைவாத பெயரில் குழுக்கள் அதிகரித்து வருகிறது. வேலையில்லாத இளைஞர்களை மத மோதல்களில் ஈடுபடுத்த முயற்சி நடக்கிறது. அனைத்து மத மக்களையும் ஒன்றிணைக்க முடியாமல் வேலை தேடி போராடும் நிலை உள்ளது.

தற்போது இந்தியாவில் வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி குறித்த பேச்சு இல்லை. ஆனால், மக்கள் எதை சாப்பிடலாம்? என்பது தான் இந்தியாவில் பேச்சாக உள்ளது. என்ன சாப்பிட அனுமதி வழங்குவது?, யாருக்கு போராட அனுமதி வழங்குவது? போன்றவை தான் அங்கு முக்கிய பிரச்னையாக உள்ளது. சமூக ஆர்வலர்களும், பத்திரிக்கையாளர்களும் மிரட்டப்படுகிறார்கள். அவர்கள் தங்களது கருத்தை தெரிவித்தால் சுட்டு கொல்லப்படுகிறார்கள். மத நம்பிக்கை காரணமாக மக்கள் கொல்லப்படுகின்றனர். தலித்கள் தாக்கப்படுகிறார்கள்’’ என்றார்.

‘‘நண்பர்களே… இந்தியா தனது வளர்ச்சி பாதையில் இருந்து மாறி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள் இந்த மோசமான நிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பின்பற்றி வந்த பழங்கால சிந்தனைகள் அடங்கிய பாதையில் இருந்து விலகிச் செல்கிறது. இந்த போரில் உங்கள் உதவி இல்லாமல் வெற்றி பெற முடியாது. நமது சித்தாந்தகள் மீண்டும் திரும்புவதற்காக இந்த போர் நடக்கிறது.

எந்த நாட்டிலும் இல்லாத வகையில் 16 மில்லியன் இந்தியா வம்சாவளியினர் பல நாடுகளில் வசித்து வருகின்றனர். வளைகுடா மண்டலங்கள் இந்தியாவில் முக்கிய வர்த்தக மையமாக விளங்குகின்றன. அதிகப்படியான இந்தியர்கள் இங்கே வசிக்கின்றனர். அதிக வெளிநாட்டு பணம் வரவு வைக்கப்படும் நாடு இந்தியாவாக உள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 3.5 சதவீதம் அதாவது 70 பில்லியன் டாலரை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளீர்கள்.

எவ்விதமான பொருளும் இன்றி வெறுங்கைகளுடனும், கனவுகளோடும் வெளிநாட்டு மண்ணிற்கு நீங்கள் வ ந்தீர்கள். உங்கள் கனவுகளையும் நிறைவேற்றிக் கொண்டு நாட்டை கட்டுமானமும் செய்துள்ளீர்கள். 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் உலகளாவிய நோக்கத்திற்கு வெளிநாடு வாழ் சகோதர சகோரிகளின் ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.

இந்தியா பழைய வலுவான நிலையை அடைய நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்தியா அகிம்சை மற்றும் அமைதியின் அங்கம் என்பதை மீண்டும் உருவாக்க வேண்டும். நான் உங்களது உதவியை கேட்டு இங்கே வந்துள்ளேன். வெறுப்பு மற்றும் கோபத்தை எதிர்த்து போராட நீங்கள் உதவ வேண்டும்’’ என்றார்.