ஃபிலிப்கார்ட்டுக்கு போன் செய்தால் பாஜக உறுப்பினராகலாம்…..புதிய காமெடி

கொல்கத்தா:

ஃபிலிப்கார்ட் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போன் செய்தால் பாஜக உறுப்பினராகும் சம்பவம் நடந்து வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கால்பந்து ரசிகர் ஒரு ஃபிஃபா 2018 போட்டிகளை மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் பார்ப்பதற்காக 2 செட் ஹெட்போன்கள் வாங்க முடிவு செய்தார். இதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிலிப்கார்டில் புக் செய்தார். அவரது வீட்டிற்கு பார்சல் வந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் எண்ணெய் பாட்டில் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ரசிகர் பார்சல் மீது குறிப்பிடப்பட்டிருந்த ஃபிலிப்கார்ட் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால், ஒரு ரிங்கில் போன் கட் ஆனது. அடுத்த விநாடியே ‘‘வெல்கம் டூ பிஜேபி’’ என்ற மெசேஜ் போனுக்கு வந்துள்ளது. இதை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த ரசிகர், அதில் இருந்து மீழ்வதற்குள் மற்றொரு மெசேஜ் வந்தது. அதில் பாஜக.வில் சேர்ந்ததற்காக உறுப்பினர் எண் இருந்தது.

தொடர்ந்து அவர் பல முறை அந்த நம்பருக்கு முயற்சி செய்தார். தனது நண்பர்கள் மூலமும் முயற்சி செய்தார். எல்லோருக்கும் அதேபோல் மெசேஜ் வந்துள்ளது. ஏதோ தவறு நடக்கிறது என்பதை தெரிந்து கொண்ட அந்த ரசிகர் நடந்தவற்றை டுவிட்டரில் பதிவிட்டார். இதை கண்டு பலரும் அந்த நம்பரை தொடர்பு கொண்டு சோதனை செய்தனர். அவர்களுக்கும் அதே மெசேஜ் வந்துள்ளது.

ஃபிலிப்கார்ட் நிறுவனத்துக்கும் தங்களுக்கு எந்த தொடர்பு இல்லை என்று மேற்கு வங்க பாஜக மறுத்துவிட்டது. ஃபிலிப்கார்ட் நிறுவனமோ அது தங்களது பழைய வாடிக்கையாளர் சேவை மையம் தொலைபேசி என்று தெரிவித்தது. தவறுதலாக பார்சலில் அந்த நம்பர் குறிப்பிடப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இறுதியில் ரசிகரின் பணத்தை திருப்பிக் கொடுக்க சம்மதம் தெரிவித்த ஃபிலிப்கார்ட் நிறுவனம் எண்ணெய் பாட்டிலை பயன்படுத்துங்கள் அல்லது தூக்கி எறிந்துவிடுங்கள் என்று ரசிகருக்கு தெரிவித்துள்ளது.