சென்னை:

காவல் துறையினரின் டார்ச்சரால், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கால் டாக்சி ஓட்டுநர் விவகாரம் தொடர்பாக  சென்னை காவல் ஆணை யருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னையில்  கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர்  தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், தற்கொலை செய்வதற்கு முன்பு அவர், தான் தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ வெளியாகி உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இது காவல்துறை யினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கால்டாக்சி ஓட்டுனர் ராஜேஷ்

திருவண்ணாமலை அருகே உள்ள  ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ், சென்னையில் கால் டாக்சி ஓட்டி வருகிறார். இவர் கடந்த கடந்த 25ம் தேதி காலை 8 மணியளவில் டிஎல்எஃப் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை  சாவரி ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். வழியில் மற்றொரு ஊழியரை ஏற்றிக் கொள்வதற்காக பாடி சிக்னலில் இருந்து அண்ணா நகர் செல்லும் வழியில் கால்டாக்சியை நிறுத்தியுள்ளார்.

அப்போது அங்கு ரோந்து வந்த 2 போலீசார், அந்த இடத்தில் காரை நிறுதக் கூடாது எனக் கூறி அவரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. அதை யடுத்து, காரை சற்று தள்ளி நிறுதிய ராஜேசிடம் மீண்டும், காவலர்கள் வந்து தகாத வார்த்தைகளால் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஷ், சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜேசின் தற்கொலைக்கு  குடும்பப் பிரச்சனை காரணம் என கூறி வழக்கை காவல்துறையினர் மூடினர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனையும், அவரின் உறவினர்களிம் ஒப்படைத்தனர்.

ராஜேசின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது செல்போனை ஆராய்ந்த அவரது குடும்பத்தினர், அவரது செல்போனில் உள்ள தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து, அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் பெறும் தொழில் நுட்பம் மூலம் அதற்குரிய பொறியாளரிடம் கொடுத்து  தகவல்களை மீட்டனர்.

அதில், ராஜேஷ்  தற்கொலைக்கு முன்னர் பேசி பதிவு செய்த வீடியோ சிக்கியது. அதில்,  தன்னுடைய சாவிற்கு காவல்துறையினர்தான் காரணம் என  ராஜேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற சம்பவங்களுக்கு தனது சாவு முற்றுப்புள்ளி வைக்கட்டும் எனவும் உருக்கமாக தனது  இறுதி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் மீது நடவடிக்கை வலியுறுத்தி கால் டாக்சி டிரைவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் ராஜேசை தற்கொலைக்கு தூண்டிய காவல்துறையினர்மீது நடவடிகக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும் வழக்கு போட்டுள்ளனர்.

கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை தொடர்பாக விசாரிக்க, மேற்கு சென்னை இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிந்த மாநில மனித உரிமை ஆணையம், சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.