இந்திய தேர்தல்களில் பணியாற்றிய கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா : திடுக்கிடும் தகவல்

டில்லி

கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் இந்தியத் தேர்தல்களிலும் பணியாற்றியதாக செய்திகள் வெளியானதை ஒட்டி காங்கிரஸ்-பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா என்னும் நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிக்கு உதவியதாக தகவல்கள் வெளியாகின.   முகநூல், டிவிட்டர் ஆகிய வலைத்தளங்களில் இந்த நிறுவனம் பெரும் தொகை பெற்று ட்ரம்புக்காக பணியாற்றியது.    இந்த நிறுவனம் ட்ரம்ப்புக்கு ஆதரவான கருத்துக்களை சமூக தளங்கள் மூலம் பரப்பி அவருக்கு உதவி உள்ளது.

இந்த நிறுவனம் ட்ரம்புக்காக பணியாற்றிய போது முகநூலில் சுமார் 5 கோடி அமெரிக்கர்களின் விவரங்களை திருடியதாக தகவல்கள் வெளியாகின.    ஒரு செய்திச் சேனலான சேனல் 4 நடத்திய ஒரு ஆய்வில் இந்த தகவல்கள் வெளி வந்துள்ளன.   அதையொட்டி முகநூல் இந்த நிறுவனம் தவறான முறையில் தகவல்களை பயன்படுத்தியதாக கூறி வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.   அதே நேரத்தில் கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் தனத் வலைத்தளத்தில் இந்தியா, நைஜீரியா, கென்யா, செக், அர்ஜெண்டினா உள்ளிட்ட பல நாட்டுத் தேர்தல்களில் பணியாற்றியதாக தெரிவித்தது.

கடந்த 2010 ஆண்டு இந்தியாவில் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இந்த நிறுவனம் பணியாற்றியதாக தெரிவித்துள்ளது.     இந்த தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வெற்றி பெற்றது இந்த நிறுவனத்தின் உதவியால் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.   ஆனால் இந்த நிறுவனம் எந்தக் கட்சிக்காக பணி ஆற்றியது என்னும் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் இந்தியா பகுதியில் எந்த ஒரு நேரடித் தகவலும் அளிக்கப்படவில்லை.   அதே வேளையில் மற்றொரு நிறுவனமான ஓவ்லெனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ் லிமிடட்  இணைந்து பணியாற்றியதாகவும் அந்த நிறுவனத்துக்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வாடிக்கையாளர்கள் எனவும் கூறப்படுகிறது.

ஓவ்லெனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணையதளம் தற்போது முடக்கப்பட்டுள்ளதால் இது குறித்த உண்மை நிலை சரிவரத் தெரியவில்லை.