தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுவையின் காமராஜ் நகர் தொகுதிக்கும் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் பிரச்சாரங்கள் முடிவுக்கு வர உள்ளன.

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், புதுவையின் காமராஜ் நகர் தொகுதிக்கும் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் 24ம் தேதி எண்ணப்பட உள்ளன. 2021ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அத்தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் தமிழகத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் ஆளும் அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தொகுதியில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ நாராயணன் உட்பட 23 பேர் போட்டியிடுகின்றனர். அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் சினிமா இயக்குனர் கவுதம் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.

இரு தொகுதிகளிலும் பல வேட்பாளர்கள் களமிறங்கினாலும், பிரதான கட்சிகளான திமுக, காங்கிரஸ் கூட்டணி மற்றும் அதிமுக இடையே தான் போட்டி நிலவி வருகிறது. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கூட்டணி கட்சி தலைவர்களான ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இன்று விக்கிரவாண்டியில் நடைபெறும் பிரச்சாரத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுக வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முக்கிய தலைவர்கள், கூட்டணி தலைவர்களான கே.எஸ் அழகிரி, குஷ்பு ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் தரப்பில், பிரச்சாரத்தில் பெரும் ஈடுபாடு காட்டப்படாததால், திமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இன்றோடு பிரச்சாரம் முடிவடையும் நிலையில், பணப்பட்டுவாடாவும் தாராளமாக நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தேர்தலில் வெற்றி பெற்றாகவேண்டிய கட்டாயத்தில் அதிமுகவும், வென்றால் பொதுத்தேர்தலில் ஆட்சியை பிடிப்பது சுலபமாகும் என்கிற மனநிலையில் திமுகவும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். வாக்கிற்கு ரூ. 2,000 வரை கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதால், யாருக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கும் என்பது சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

புதுவையின் காமராஜ் நகரில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால், இன்றைய கடைசி நாள் பிரச்சாரத்தில் கூடுதலாக தீவிரம் காட்ட என்.ஆர் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.