டில்லி

சிபிஐ குற்றப்பத்திரிகையில் பெயர் குறிப்பிடாமலே முன்னாள் அமைச்சர் சிதம்பரம்  கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஐ என் எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய முதலீடு விவகாரத்தில் விதியை மீறி உதவி செய்ததாக முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் குற்றம் சாட்டப்பட்டார்.   அவருக்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் மகனும் சிவகங்கை மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் உள்ளார்.  இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ சிதம்பரத்தை விசாரணைக்கு அழைத்திருந்தது.   அதை ஒட்டி முன் ஜாமீன் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு அளித்தார்.

அந்த மனுவை டில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  அதையொட்டி சிபிஐ டில்லியில் உள்ள  சிதம்பரம் வீட்டுக்கு அவரைக் கைது செய்ய சென்றனர்.  அவர் இல்லாததால் அவர் வீட்டு வாசலில் ஒரு நோட்டிஸை ஒட்டி விட்டு அதிகாரிகள் சென்றனர்.   இந்நிலையில் நேற்று இரவு காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சிதம்பரம் சந்தித்தார்.

அப்போது அவர் சிபிஐ இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையான முதல் தகவல் அறிக்கையில் தனது பெயரைக் குறிப்பிடவில்லை எனவும் ஆயினும்  தம்மைக் கைது செய்ய முயல்வதாகவும் தெரிவித்தார்.  அதன் பிறகு நேற்று இரவு சிதம்பரத்தின் இல்லத்தின் சுவரேறிக் குதித்து உள்ளே சென்று சிபிஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்

இது குறித்து டில்லி உயர்நீதிமன்றம், “இந்த வழக்கில் முக்கிய புள்ளியாக சிதம்பரம் கருதப்படுகிறார்.  எனவே முதல் தகவல் அறிக்கையில் அவர் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும் எனத் தேவை இல்லை.  மேலும்  அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் உள்ளதால் தமக்கும் ஜாமீன் அளிக்க வேண்டும் என கோர முடியாது.   இந்த குற்றம் நடந்த போது சிதம்பரம் நிதி அமைச்சராகப் பணி புரிந்துள்ளார் என்பதே கைதுக்கு போதுமானதாகும்.” என தெரிவித்துள்ளது.