மெரினாவை நினைவிடக் கரையாக மாற்றலாமா?

சிறப்புக்கட்டுரை : அ. குமரேசன்

“சார், என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியும். கலைஞர் மேல விமர்சனம் இருந்தாலும், அவரோட இடத்துக்கு இன்னொருத்தர் வர முடியாதுங்கிற அளவுக்கு மரியாதை வைச்சிருக்கிறவன் நான்,” என்று தொடங்கினார் ஊடகவியலாளரான அந்த நண்பர்.

“நல்லாவே தெரியும். அவரைப்பத்திப் பேசுறப்ப எல்லாம் இதை நீங்க வெளிப்படுத்தியிருக்கீங்க,” என்றேன் நான். இந்த நேரத்தில் கலைஞர் பற்றி ஏதாவது எதிர்மறையாக எழுதி எக்கச்சக்கமாக வாங்கிக்கட்டியிருப்பாரோ என்று நினைத்தேன். அதைக் கேட்கவும் செய்தேன்.

“அப்படியெல்லாம் இல்லை சார். அவருக்கு மெரினாவில் அண்ணா சமாதி வளாகத்திலேயே இடம் ஒதுக்குனது சம்பந்தமா எனக்கு மாற்றுக் கருத்து இருக்கு. அதை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிட லாம்னுதான்…”

“சொல்லுங்க…”

“விசயம் கோர்ட்டுக்குப் போனப்பவே எனக்கு இந்தச் சிந்தனை வந்துச்சு. ஆனா திமுக தொண்டர் கள்  உணர்ச்சிவசப்பட்டு நிக்கிறப்ப அதைப் விவாதிக்கிறது முறையா இருக்காதுன்னுதான், இப்ப உங்ககிட்ட மட்டும் பேசுறேன். எனக்கு அதிலே உடன்பாடு இல்லை சார். கலைஞருக்கு சிறப்பான மெமோரியல் கட்டணும்கிறதுல எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்  அதுக்கு மெரினா வைப் பயன்படுத்துறது சரியில்லைன்னு நினைக்கிறேன். அவருக்கு மட்டுமில்லை, யாருக்குமே அந்த இடத்தை அப்படிப் பயன்படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறேன். ஏற்கெனவே அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அங்கே இடம் ஒதுக்குனது கூடத் தப்புதான்னு சொல்றேன். உங்க கருத்து என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் பதிவு பண்ணலாம்னு….”

இந்தக் கருத்து பலருக்கும் இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதில் தயக்கமும் பலரிடத்தில் இருக்கிறது. சமூக ஊடகங்களில் தங்கள் உடன்பாடின்மையை வெளிப்படுத்தியவர்கள் இருக்கி றார்கள். அவர்களில், கலைஞருடனான அரசியல் வேறுபாடு காரணமாக இதற்கு உடன்படாத வர்கள் உண்டு. வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களில், இயக்கச்சார்பு எதுவும் இல்லாதவர்களில், அவரது ஆளுமையையும் பங்களிப்புகளையும் ஏற்கிறவர்களானாலும், மெரினா போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த இடம் இவ்வாறு தலைவர்களின் நினைவிட மையமாக்கப்பட்டு விடக்கூடாது என்ற கோணத்தில் உடன்படாதவர்களும் உண்டு.

முக்கியப் பிரமுகர் முட்டுக்கட்டை?

அந்த இடத்திற்கான கோரிக்கையை ஏற்பது தொடர்பாக அதிமுக நிர்வாகிக்ளுக்கிடையே இரண்டு நிலைப்பாடுகள் வந்தன என்று ‘ஆனந்தவிகடன்’ இணையப்பதிப்புச் செய்திக்கட்டுரை தெரி விக்கிறது. அனுமதிப்பதன் மூலம் ஆட்சிக்குப் பொதுமக்களிடம் நற்பெயர் கிடைக்கும் என்று ஒரு பிரிவினரும், கட்சித் தொண்டர்களின் ஆதரவை முழுமையாகத் தக்கவைக்க திமுக எதிர்ப்பு என்ற அதிமுக பாரம்பரியத்தைத் தொடர வேண்டும் என்று இன்னொரு பிரிவினரும் வற்புறுத்தி னார்களாம்.

அனுமதிப்பதில்லை என்று முதலில் எடுத்த முடிவு மத்திய ஆட்சியாளர்களிடமிருந்து வந்த நிர்ப்பந்தம் எனத் தமிழக ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்து திமுக தலைவர்களுக்குச் சொல்லப் பட்டதாக அந்தச் செய்திக்கட்டுரை தெரிவிக்கிறது.

ஒரு “முக்கியப் பிரமுகர்” தலையிட்டு, கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில்  இடம் ஒதுக்கினால், அந்த இடமே கடவுள் மறுப்பாளர்களுக்கான இடமாக அடையாளம் பெற்றுவிடும், ஆகவே சட்டக் காரணங்களைச் சொல்லித் தவிர்த்துவிடுமாறு சொன்னதாகவும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

சித்தாந்த அடிப்படையில் அனுமதி மறுக்கச் சொன்னவர் யாராக இருக்கும் என்று நான் முகநூலில் கேட்டிருந்ததற்கு வந்த பதில்களில் பலவும் தற்போது ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவரைக் குறிப்பிடுவதாக இருக்கின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி மெரினாவிலேயே இடம் தரப்பட்டது. இறுதி மரியாதை நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசின் சார்பில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இருவரும் கலந்துகொண்டனர்.

மறுநாள் செய்தியாளர்கள் பேட்டியளித்த ஜெயக்குமார், திமுக முன்வைத்த மற்ற அத்தனை கோரிக்கைகளையும் அரசு ஏற்றது என்றும், மெரினா பிரச்சனையை மு.க.ஸ்டாலின் அரசியலாக்கு கிறார் என்றும் கூறினார்.

ராஜாஜி, காமராஜர், பெரியார், ஜானகி ராமச்சந்திரன் ஆகியோருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்தவர் அவர்கள் காலமானபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதிதான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

கலைஞர் மீதே குற்றச்சாட்டு

முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தை ஒதுக்கியது, காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தது உள்ளிட்ட மற்ற கோரிக்கைகளை ஏற்றதில் பெருந்தன்மை ஒன்றுமில்லை. அதெல்லாம் எந்த அரசும் மேற்கொண்டாக வேண்டிய இயல்பான நடவடிக்கைகளே.

முதலமைச்சரை கலைஞர் குடும்பத்தினரும் தலைவர்களும் மொத்தமாகச் சந்தித்து முன்வைத்த கோரிக்கைகளில் முக்கியமானதாகிய மெரினா ஒதுக்கீட்டை, உயர்நீதி மன்றம் தலையிட்டாக வேண்டிய அளவுக்குப் பிரச்சனையாக்கியது ஆட்சியாளர்கள்தான், ராஜாஜி, பெரியார், காமராஜர், ஜானகி ராமச்சந்திரன் ஆகியோருக்கான நினைவிடம் தொடர்பாக அமைச்சர் கூறியதற்கு ஆதாரமில்லை என்றும், அவர்களுக்கு அப்படியான கோரிக்கைகள் வலியுறுத்தப்படவில்லை என்றும் அந்த நாட்களில் நிலைமையைக் கையாண்ட தலைவர்கள் சொல்லியிருப்பதை ‘தமிழ் இந்து’ தொகுத்தளித்திருக்கிறது.

அதே குழுமத்தின் ஆங்கில ஏட்டிலோ, உள்ளே செய்தியைச் சரியாகக் கொடுத்துவிட்டு, செய்தித் தலைப்பில் ‘காமராஜருக்கு மெரினாவை ஒதுக்க மறுத்தார் கருணாநிதி’ என்று நேரடியாகவே, ஒரு கேள்விக்குறி கூட இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கு உள்நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி சமூக ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

மேலிடத்தவர்கள் சொன்னதால்தான் அனுமதி மறுக்கப்பட்டதா என உறுதிப்படுத்த இயலவில்லை, ஆனால் உயர்நீதிமன்றம் சொன்னதால்தான் அனுமதிக்கப்பட்டது என்பது உறுதி. இந்த அரசுக்கு என சொந்தமாக என்னதான் நிலைப்பாடு? என்னைப் பொறுத்தவரையில், அரசியல் தளத்திலிருந்து விவாதிக்கிறபோது இதனை அரசு கையாண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உரியது, அரசியல் பகைமை கலந்த சிறுபிள்ளைத்தனமானது.

கடற்கரையில் கல்லறைக் கட்டுமானம்

அதே வேளையில், கருத்தியல் தளத்திலிருந்து விவாதிக்கிறபோது மெரினா போன்ற, கட்சி வேறுபாடுகளும் சித்தாந்த மாறுபாடுகளும் உள்ளவர்களும் அரசியல் ஈடுபாடே இல்லாதவர்களும் வருகிற ஒரு இடம் தலைவர்களின் நினைவிடமாக மாற்றப்பட வேண்டுமா என்றே கேட்க விரும்புகிறேன்.

வங்கக் கடல் வானிலிருந்து வருகிற காற்று எல்லோருக்கும் பொதுவானது. அலைகள் கரையில் கொண்டுவந்து குவிக்கிற மணல் பொதுவானது. அந்த இடமும் அப்படிப் பொதுவானதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். சுனாமி போன்ற கடந்தகால அனுபவங்களை நினைவுகூர்ந்து, கடலருகில் இத்தகைய கட்டுமானங்கள் அமைவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி சூழலிய லாளர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடற்கரைக்கு வருகிற பல்வேறு தரப்பினரும் அந்த நினைவிட வளாகங்களைக் கடக்கிறபோது, அந்தத் தலைவர்களின் தொண்டர்கள், ஆதரவாளர்கள் அல்லாத மற்றவர்கள், மனதுக்குள் சிறிதள வேனும் உடன்பட முடியாத உணர்வோடுதான் செல்வார்கள்.

அரசு இதையெல்லாம் மனதில்கொண்டுதான் முதலில் அனுமதி மறுத்ததா? இல்லை. முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்போடுதான் இந்த முடிவை எடுத்தது என்பது வெளிப்படை. கடற்கரையின் ஒரு துளி மணல் அளவுக்குக்கூட ஆதரிக்க முடியாத அணுகுமுறை அது. ஆகவேதான் பெரும்பாலான அரசியல் கட்சிகளாலும் கருத்தாளர்களாலும் அந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கடலே இடுகாடாய்

உலகில் வேறு எந்தக் கடற்கரையாவது இத்தகைய நினைவிடங்களாக இருக்கிறதா? தகவல் தளங்களில் தேடியவரையில் அப்படிப்பட்ட இடங்கள் இருப்பதாகத் தெரியவரவில்லை. ஆனால் சில நாடுகளில் கடல் உடல்களின் அடக்கத்தலமாகப் பயன்படுத்தப்படுகிறது. படகிலோ கப்பலிலோ நடுக்கடலுக்குச் சென்று உடலைப் போட்டுவிடுவார்கள். அது கடலடியைச் சென்றடையலாம், சுறாக்களுக்கு இரையாகலாம்! ஸ்காட்லாந்தில் இதற்கென்றே இரண்டு படகுத்துறை இடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்.

2011ல் பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க ராணுவம், பின்னர் நடுக்கடலில்தான் உடலை வீசியது. நிலப்பகுதியில் பின்லேடனுக்கு நினைவுத்தலம் உருவாக விடக்கூடாது என்பதற்காகத்தான் கடலில் உடலை வீசியதாக அமெரிக்க அரசு கூறியது.

இந்த நிகழ்வுகளோடு கலைஞர் தன் இறப்பிலும் தனக்கான இடத்தை நிறுவிக்கொள்ள நடத்திய போராட்டத்தை ஒப்பிட முடியாது, ஒப்பிடக் கூடாது. ஆயினும் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தமான பகுத்தறிவு சார்ந்த கண்ணோட்டத்திலேயே இக்கருத்தை வெளிப்படுத்துகிறேன்.

இறுதிநிகழ்ச்சியில் சம்பிரதாயச் சடங்குகள் எதுவும் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டதன் பாராட்டுக்குரிய பகுத்தறிவு அணுகுமுறை இதுபோன்றவற்றிலும் படர்ந்து பரவ வேண்டும். அதுவே பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தொடர்ச்சியின் சித்தாந்தத் தடத்தை வலுப்படுத்த உதவும், அவர்களுக்குப் பலமடங்கு மெய்யான மரியாதையாக அமையும்.

இவ்வாறு சொல்வதன் பொருள், வேறு சிலர் அடாவடியாகக் கூறுவது போல, மெரினா நினை விடங்களை உடனே அப்புறப்படுத்தி வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதல்ல. கோடிக்கணக்கான தொண்டர்கள் ஆதரவாளர்களின் உணர்வோடு பின்னியுள்ள கேள்வி இது. ஆகவே அது பற்றி முடிவு செய்வதை வருங்கால வரலாற்றிடம் விட்டுவிடலாம். ஆனால் இனியொரு தலைவருக்கு அங்கே நினைவிடம் அமைக்கப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்தலாமே.

வரலாறு சொல்ல வேண்டாமா?

நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக இன்னொரு சிந்தனையையும் பகிரிந்துகொள்ள விரும்பு கிறேன். மெரினாவிலோ, கிண்டியில் பட்டேல் சாலையிலோ இருக்கிற நினைவிடங்கள் அந்தத் தலைவர்களின் வாழ்க்கையைச் சொல்வதாக இல்லை. அவர்கள் முன்னெடுத்த இயக்கங்களின் வரலாற்றைச் சொல்வதாக இல்லை. அவர்கள் தொடங்கிய பயணங்களின் சமத்துவ இலக்கு களைச் சொல்வதாக இல்லை.

இன்னும் சொல்லப்போனால், சமூக மாற்றத்திற்காக இயங்குகிறவர்கள் கலந்துரையாடவோ, மக்களிடம் கருத்துக்கூறவோ அந்த மண்டபங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. சில தலைவர்களுக்கான மணிமண்டபங்கள் அமைக்கப்படுவது பற்றிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டபோதெல்லாம், அந்த இடங்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மாற்றப்பட்டுவிடக் கூடாது, மாறாக வரலாறு பேசுகிற, வரலாறு படைக்கத் தூண்டுகிற மையங்களாகப் பேணப்பட வேண்டும் என்று எழுதி வந்திருக்கிறேன்.

நூலகங்கள், ஆய்வுக்கான ஆவணக்காப்பகங்கள் உள்ளிட்ட வசதிகள் அந்த மண்டபங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பேசிவந்திருக்கிறேன். அவையெல்லாம் எழுத்துகளாகவும் பேச்சுகளாகவுமே போய்க்கொண்டிருக்கின்றன.

எனக்குத் தெரிந்து சென்னையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் மட்டுமே சமூக அக்கறையாளர் கள் கூடி விவாதிக்க முடிகிறது. அது எல்லா நினைவகங்களின் அடையாளமாக மாறுமானால் அது சமுதாயத்தின் அரசியல் புரிதலுக்கும் தலைமுறைகளின் அறிவுத்தள வளர்ச்சிக்கும் பங்களித்துக் கொண்டிருக்குமே.

இன்னொரு சிந்தனையும் சேர்ந்துகொள்கிறது. ஆளுமை மிக்க தலைவர்கள் தங்கள் உடலை மருத்துவ மாணவர்களின் கல்விக்காக ஒப்படைக்க முன்வரலாமே. மேற்கு வங்கத்தில் ஒரு ஜோதிபாசு செய்துகாட்டியிருக்கிறாரே.

சமூகநீதி அறத்தால் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளும் மருத்துவம் பயில வருகிறார்கள். அவர்கள் எதிர்காலத்தில் சமூகப் பொறுப்போடு மருத்துவர் அங்கிகளை அணிந்திடும் அக்கறையை இப்படிப்பட்ட உடல்தான முனைப்புகள் வளர்க்குமே. சமூக அக்கறையோடும் பகுத்தறிவுப் பார்வையோடும் தடம்பதித்த தலைவர்கள் இதற்கு முன்வருவது சிறந்ததொரு முன்னு தாரணத்தை வகுத்திடுமே.