மெரினாவில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை:

மெரினா கடற்கரையில் எவ்விதப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களையும் அனுமதிக்க முடியாது சென்று  சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ, உண்ணவிரதம் என எந்தவகையான போராட்டமும் நடத்த அனுமதி கிடையாது என்றும், சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 27 இடங்கள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற தனிநீதிபதி,மெரினா கடற்கரையில் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த கடந்த ஏப்ரல் மாதம் 28ந்தேதி தனி நீதிபதி அனுமதி அளித்தார்.

அதைத் எதிர்த்து தமிழகஅரசு சார்பில் அன்றே மேல்முறையீடு செய்து அவசர வழக்காக  விசாரிக்க கோரியது. வழக்கை விசாரித்த சென்னை  உயர்நீதி மன்றம் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பளித்த  சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் அமர்வு, ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி கொடுத்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாகவும்,  மெரினாவில் எவ்வித போராட்டத்தையும் அனுமதி முடியாது என  திட்டவட்டமாக தெரிவித்தது.