ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: ஆலை நிர்வாகத்துக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடிதம்!

 

சென்னை:

13 பேரின் உயிர்களை துப்பாக்கி சூட்டுக்கு  பலி வாங்கியதை தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி  சீல் வைத்த தமிழக அரசு, மீண்டும் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்து உள்ளத.

இதுகுறித்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையின் துணைத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

தூத்துக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையை  மூடி சீல் வைத்தது தமிழக அரசு.

ஆனால், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத் தில் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதில்,  ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்கவும்,  ஆலை உள்ள பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குறித்து தினசரி ஆய்வு செய்து அறிக்கை இணை தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும்,  3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தூத்துக்குடி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதற்கிடையில் மதுரை உயர்நீதி மன்றமும், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

ஆனால், வேதாந்தா நிறுவனமோ 2 மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று கொக்கரித்து வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேதாந்த நிறுவனத்தின் துணைத்தலைவர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கும் என உறுதிப்பட தெரிவித்தார். இது தூத்துக்குடி மக்களியே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வேதாந்தா நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலைவர் ஷாம்பு கலோலிகர் ஐஏஎஸ், வேதாந்தா நிறுவன துணைத்தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் கடிதத்தை சுட்டிக்காட்டி பதில் தெரிவித்து உள்ளார்.

அதில், தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து 2-1-2019 அன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது.  எனவே கடிதம் குறித்து தற்போது எந்தவித  முடிவும் எடுக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது தடை பட்டுள்ளது.