Random image

எச்.ராஜாவை கைது செய்ய உத்தரவிட முடியாது: உயர்நீதி மன்றம் கைவிரிப்பு

சென்னை:

நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், எச்.ராஜாவை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

புதுக்கோட்டை அருகே திருமயம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஹெச்.ராஜா, நீதிமன்றம் குறித்தும் காவல் துறையினர் குறித்தும் அவதூறாகப் பேசிய வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எச்.ராஜாவின் பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்மீது 8 பிரிவுகளில் வழங்கு தொடரப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை கூறி உள்ளது.

இந்த நிலையில், எச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,   எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி கைவிரித்து விடடது.

இதனிடையே, பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் அவரது வீட்டுப் பெண்களை அவதூறாகப் பேசியதாகக் கூறி, அதனைக் கண்டித்து திண்டுக்கல்லில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். எச் ராஜாவின் உருவப்படத்திற்கு மை ஊற்றி அழிக்கும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.