‘பேனர் தடை’யை நீக்க முடியாது: சென்னை ஐகோர்ட்டு மீண்டும் மறுப்பு!

சென்னை,

மிழகத்தில் பேனர்கள் வைக்கப்படுவதை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த அக்டோபர் 24ந்தேதி தமிழகத்தில் பேனர்கள் கட் அவுட்கள் வைக்ககூடாது  சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி அதிரடி தீர்ப்பு அளித்திருந்தார்.

அதில், உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பேனர்களில் பயன்படுத்த தடை விதித்து உள்ளது. மேலும், பொது இடங்களில் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சுவற்றில் படம் வரையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்பொது மீண்டும் தடை நீக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

சென்னையை சேர்ந்த திரிலோக சுந்தரி என்பவர் சட்டவிரோதமாக தனது வீட்டின் முன் பேனர் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை எதிர்த்து மாநகராட்சியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி வைத்தியநாதன், தமிழகத்தில் பேனர் வைக்க தடை விதித்து அதிரடி தீர்ப்பு கூறியிருந்தார்.

இதை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்திருந்த நிலையில், மீண்டும்  மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று  நீதிபதிகள் சிவஞானம், நீதிபதி ரவிச்சந்திர பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி பேனர் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும், பேனர், கட்அவுட்களை வைப்பதால் அரசுக்கு வருவாய் கிடைப்பதாகவும் கூறினிர்.

இதற்கு பதில் தெரிவித்த நீதிபதிகள் பேனர், கட்அவுட் வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது  என்றும்,  இந்த வழக்கு ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வு முன்பும் விசாரணையில் உள்ளதால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறினர்.

மேலும் வழக்கின் விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்