தமிழக தேர்தல்களில் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை: ஓ.பி.ராவத்

டில்லி:

மிழகத்தில் 2 தொகுதிகளின்  தேர்தலை ரத்து செய்தும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடிய வில்லை  என்று  முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறி  உள்ளார்.

தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்லின்போது டிடிவி தரப்பும், ஆளும் அதிமுகவும் பணத்தை வாரி இறைத்ததன் காரணமாக தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. பின்னர் சில காலம் கழித்து மீண்டும் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலின்போது வாக்கு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை வழங்கி டிடிவி தினகரன் வெற்றி பெற்றதாகவும், அதற்காக ரூ.20 டோக்கன் வழங்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இன்று வரை பணம் கிடைக்காத பலர் 20ரூபாய் டோக்கனை கையில் வைத்துக்கொண்டு பணத்துக்கு அல்லாடி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்  முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்  ஊடக பேட்டி ஒன்றில் இதுகுறித்து கூறியுள்ளார்.

அதில், தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக  2 தொகுதி தேர்தலை ரத்து செய்தும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை. பணப்பட்டுவாடா தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது என்று கூறி உள்ளார்.

ஒரு மாநில தேர்தல் களத்தில் பணப்பட்டுவாடா அதிகரித்ததே நான் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்த போது எதிர்கொண்ட முதல் சவால் என்றவர்,    முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது, சில மாநிலங்களில் அதிக அளவு கறுப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பால், தேர்தல்களில் கறுப்பு பண புழக்கத்தை தடுக்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.