பாரிஸ்

ர்ஜிகல் முகக் கவசங்களை மீண்டும் பயன்படுத்துவது குறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவுவதால் அனைத்து நாடுகளிலும் பணி புரியும் போது, பயணம் செய்யும் போது, வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.    மருத்துவர்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய முகக் கவசத்தைப் பரிந்துரைத்தாலும் விலை என்பது முக்கியமானதாக உள்ளது.   அது மட்டுமின்றி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முகக் கவசங்கள் நீர்நிலைகளையும் கடலையும் மாசுபடுத்துகிறது.

எனவே மக்கள் பலமுறை பயன்படுத்தக் கூடிய துணி முகக் கவசங்களை பயன்படுத்துகின்றனர்.  குறிப்பாக அறுவை சிகிச்சை நேரத்தில் பயன்படுத்தும் சர்ஜிகல் முகக் கவசங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.   இதற்குக் காரணம் இவற்றின் மலிவு விலை மட்டுமின்றி மிகவும் எடை குறைவாக உள்ளதும் ஆகும்.   இவற்றை ஒரு முறை பயன்படுத்தி விட்டு மூடப்பட்ட குப்பைத் தொட்டிகளில் போட உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது.

அதே வேளையில் கடந்த மார்ச் தொடங்கி ஜூன் வரையிலான காலகட்டத்தில் உலகில் கொரோனா தொற்று மிக அதிகமாக இருந்ததால் முகக் கவசம் அதிக அளவில் இல்லாமல் போனது. எனவே ஒரே கவசத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.  அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரக் காலங்களில் என் 95 முகக் கவசங்களை ஹைட்ரஜன் பெராக்சைட் கொண்டு சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியது.

இதைத் தவிர இதை அல்டிரா வயலட் கதிர் அல்லது அதிக வெப்பத்தில் காட்டியும் பயன்படுத்தலாம் எனப் பிரெஞ்சு அரசு கூறியது.  ஆனால் இவை அனைத்தும் வீடுகளில் செய்ய வசதி இல்லாததால் பொதுமக்களால் பின்பற்ற முடியாமல் உள்ளது.   எனவே அடியோஸ் கொரோனா என்னும் விஞ்ஞானிகள் குழு ஆய்வு ஒன்றை நடத்தியது.

இந்த ஆய்வில் சுமார் ஒரு வாரத்தில் முகக் கவசத்தில் உள்ள கொரோனா வைரஸ் உயிரிழந்து விடுவது தெரிய வந்தது.  எனவே ஒருமுறை பயன்படுத்திய முகக் கவசங்களை ஒரு காகித உரையில் வைத்து அந்த தேதியை எழுதி 7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தலாம் எனக் குழு தெரிவித்துள்ளது.   ஆனால் இந்த முறை சுகாதாரப் பணியாளர்களுக்குச் சரிவராது என சொல்லப்படுகிறது.

இது குறித்து பிரஞ்சு வாடிக்கையாளர் உரிமைக் குழு, சர்ஜிகல் முகக் கவசங்களை சுமார் 60 டிகிரி வெப்ப நீரில் சுத்தம் செய்யலாம் என முடிவுக்கு வந்துள்ளது.   இவ்வாறு 10 முறை வரை சுத்தம் செய்யலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.   சுமார் 5 முறைகளுக்கு பிறகே அந்த முகக் கவச வடிகட்டிகள் சற்றே தளர்வதால் 10 முறை வரை மட்டுமே சுத்தம் செய்யலாம் என விளக்கப்பட்டுள்ளது.   அதே வேளையில் ஒரே முகக் கவசத்தை நாள் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்தாமல் நான்குமணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்து பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.