ட்டாவா, கனடா

னடா பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ள போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

கனடாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி மற்றும் நியூ டெமாக்ரடிக் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.   இதில் லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.

இந்த தேர்தலில் 170 இடங்களைப் பெறும் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும்.  இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைய அதிகம் வாய்ப்புள்ளதாகப் பல கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தன.  ஆனால் இன்று வெளியான முடிவுகளில் லிபரல் கட்சி அதிக இடங்களைப் பெற்று அந்த கணிப்புக்களைப் பொய்யாக்கி உள்ளது.

ஆயினும் பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்களை அந்தக் கட்சி பெறவில்லை.  லிபரல் கட்சிக்கு 156 இடங்கள் மட்டும் கிடைத்ததால் 14 இடங்கள் குறைவாக உள்ளன.  லிபரல் கட்சிக்கு எதிரான கன்சர்வேடிவ் கட்சிக்கு 122 இடங்கள் கிடைத்துள்ளன.  முந்தைய அவையில் இக்கட்சிக்கு 95 இடங்கள் மட்டுமே இருந்தன.

இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மூன்றாவது கட்சியான நியூ டெமாக்ரடிக் கட்சிக்குத் தனி மதிப்பு கிடைத்துள்ளது.   இந்த கட்சியின் ஆதரவு இரு கட்சிகளுக்குமே தேவை என்பதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை இக்கட்சி முடிவு செய்யும் நிலையில் உள்ளது.