டெல்லி விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவு

ஒட்டாவா: உரிமைகளுக்காக நடைபெறும் டெல்லி விவசாயிகளின் அமைதி போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள்  6 நாள்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் காணொளி வழியே குருநானக் ஜெயந்தி வாழ்த்து கூறிய கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:

விவசாயிகள் போராட்டம் குறித்து இந்தியாவில் இருந்து செய்திகள் வருகின்றன. உரிமைகளுக்காக நடைபெறும் அந்த அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும்.

போராட்டத்தின் முக்கியத்துவத்தை நம்புகிறோம். அதனால்தான், எங்கள் நிலைப்பாட்டை இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம் என்று கூறி உள்ளார்.