நாடு முழுவதும் நாளை கனரா வங்கி ஸ்டிரைக்!

டில்லி:

நாடு முழுவதும் உள்ள கனரா வங்கி அதிகாரிகள் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதையொட்டி, நாளை கனரா வங்கிகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் கனரா வங்கிகளில் பணியாற்றி வரும் சுமார் 3½ லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள வங்கி ஊழியர்கள், பொதுத்துறை வங்கிகள் இணைப்பினை கைவிட வேண்டும். தேக்க நிலையற்ற சம்பள விகிதங்கள் வழங்க வேண்டும். அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் ஸ்டேட் வங்கி போன்ற மருத்துவ காப்பீட்டு வசதி திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். அனைத்து வங்கிகளிலும் வங்கி அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியான சம்பள விகிதங்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தில் கனரா வங்கி ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் கனரா வங்கிகளில் பணிபுரிந்து வரும் சுமார் 15 ஆயிரம் ஊழியர்களும் இந்த வங்கி போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

நாளை போராட்டம் காரணமாக இன்று மாலையே அனைத்து கனரா வங்கிகளும் வங்கிகளும்  மூடப்படுகின்றன. அந்தந்த கிளை அதிகாரிகள் வங்கியினை பூட்டி சென்று விடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கியில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் வேலைக்கு வந்தாலும், வங்கிகள் உள்ளே செல்ல முடியாத வகையில் இன்றே பூட்டிவிட்டு செல்வதாக கூறப்படு கிறது.

இதையொட்டி சென்னையில், கலெக்டர் அலுவலகம் அருகே நாளை காலை 10 மணி அளவில்  ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் வங்கி ஊழியர்கள் அறிவித்து உள்ளனர்.