சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து: சிபிஐ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

மணல் கடத்தல் மன்னன் சேகர்ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த 3  வழக்கில், முதல் வழக்கை தவிர மற்ற 2 வழக்கையும்  ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டந்த 2016ம் ஆண்டு நாட்டில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது, பிரபல   மணல் சுரங்க மன்னன் சேகர் ரெட்டி ஏராளமான பணம் மாற்றியதாக கூறப்பட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சேகர் ரெட்டி, மற்றும் அவர் உறவினர்களிடம் வருமான வரி அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள்  சோத்னையிட்டதில் ரூ. 2000 புதிய நோட்டுக்கள் கோடிக்கணக்கான மதிப்பில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்து சிபிஐ  மணல் தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்பட 5 பேர் மீது  ரூ.24 கோடி  புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தாக குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கு பதிந்தது.

பின்னர்,  சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலங்களில் நடைபெற்ற சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம்  குறித்து மேலும் 2 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.

இதை எதிர்த்து சேகர்ரெட்டி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பு படி ஒரே குற்றத்துக்காக பல வழக்குகளை பதிவு செய்யக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் தங்கள்  மீது தொடர்ச்சியாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) ரத்து செய்ய வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களான சேகர் ரெட்டி, மற்றும் ஆடிட்டர் பிரேம்குமார், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம்,  சேகர்  ரெட்டி மீது பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கைத் தவிர மற்ற 2 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது