மோனோ ரயில் திட்டம் ரத்து: ஜெ. கனவு திட்டத்துக்கு ஆப்பு வைத்த எடப்பாடி அரசு:

சென்னை:

சென்னையில் மோனோ ரயில் திட்டம் கொள்கை அளவில் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரவித்துஉள்ளது. இதன் காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டத்துக்கு  ஆப்பு வைத்துள்ளது  எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு.

தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று போக்குவரத்து மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றது.

அப்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ்,  வேளச்சேரி- வண்டலூர் மோனோ ரயில் திட்டம் என்னவானது என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய  அமைச்சர் தங்கமணி, சென்னையில் இடப்பற்றாக்குறை மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பால் மோனோ ரயில் திட்டம் கொள்கை அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு அதிமுகவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான  அதிமுக அரசு பொறுப்பேற்றதும் ,  3-6-2011 அன்று படித்த ஆளுநர் உரையில் “சென்னை மாநகருக்கு  தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட “மோனோ” இரயில் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக 111 கிலோ மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக 300 கிலோ மீட்டர் வரை விரிவுபடுத்தப்படும்.  கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க “மோனோ ரெயில்” திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்”  என்று அறிவித்தது.

அதற்குப் பிறகு ஜெயலலிதா வழிகாட்டுதல்படி; 4-8-2011 அன்று படித்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், இன்றைய முதல மைச்சர், “மோனோ ரெயில்” திட்டத்தை விரைவில் தொடங்குவதற்குத் தேவையான நிதி ஆதாரம் இந்த ஆண்டிலேயே  கண்டறியப்படும் என்றார்.

கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது,  சட்டமன்ற கூட்டத்தின் போக்கு வரத்து துறை  மானிய கோரிக்கை விவாதங்களின்போது, தமிழக அரசின் போக்குவரத்து துறை  கொள்கை விளக்க குறிப்புகளை  தாக்கல் செய்தார்.

அதில்,  தமிழக அரசு மோனோ ரெயில் திட்டத்தை  செயல்படுத்த முடிவு எடுத்துள்ளது  மோனோ ரெயில் திட்டத்தை 43.48 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2 திட்டங்களாக செயல்படுத்த முடிவு எடுத்துள்ளது.

பூந்தமல்லி முதல் கத்திப்பாரா வரை இணைப்புடன் போரூரில் இருந்து வடபழனி வரை முதல் திட்டம் 20.68 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படும்.  இந்த திட்டம் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.3,267 கோடி மதிப்பீட்டில் வடிவமைத்து நிதி திரட்டி கட்டமைத்து பராமரித்து ஒப்படைக்கும் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 22.80 கி.மீ. தொலைவிலான மற்றொரு மோனோ ரெயில் திட்டம் ரூ.3,135 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் பன்னாட்டு நிதி உதவியுடன் செயல்படுத்துவதற் கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

திமுக கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜெயலலிதா, அதற்கு மாற்றாக மோனோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், அதற்கான பணிகள் நடைபெறாத நிலையில்,   ஜெயலலிதாவின் கனவு திட்டமான மோனோ ரெயில் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி தலைமையிலான தமிழக அதிமுக அரசு அறிவித்து உள்ளது.