தூத்துக்குடி வழக்கறிஞர் ஹரிராகவன் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து: மதுரை உயர்நீதி மன்றம்

மதுரை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிராகவன் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மதுரை உயர்நீதி மன்றம் ரத்து உத்தரவிட்டது. மேலும் ஆட்சியர் சந்திப் நந்தூரிக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வன்முறை தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானேர் மீது காவல்துறை வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மக்களின் போராட்டத்தை தூண்டியதாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹரிராகவன் மீது, அந்த பகுதிகளில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுமார் 93 வழக்குகள் அவர்மீது தொடர்ந்து பாய்ந்தன. இதனால் கைது செய்யப்பட்ட அவருக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை, நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஆனாலும், காவல்துறை, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மீண்டும் கைது செய்தது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஹரிராகவன் மனைவி சத்தியபாமா  மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று நடைபெற்ற விசாரணையின்போது,   இது  “ஜனநாயக நாடா ? போலிஸ் நாடா ? ” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  24 ந் தேதி ஜாமீன் வழங்கிய நிலையில் 26 ந் தேதி வழக்கு ஏன்.. ?  என்றும், இதுகுறித்து  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அவருக்கு அறிவுரைகள் வழங்கிய  நீதிபதிகள், வழக்கறிஞர் ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது என்ற நீதிபதிகள்,  ஒருவரின் சுதந்திர உரிமையை பறிக்கும் நோக்கில் காவல்துறையினர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கலெக்டரிடம் கூறினார்.

. உங்களுடைய ஒரு கையெழுத்து தனிநபரின் சுதந்தரத்தைப் பறிக்கும் என்பதை நினைவில் கொண்டு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் இதுபோன்று செயல்படக்கூடாது. நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும்’ என கலெக்டருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.