கொல்கத்தா: கேன்சரால் அவதிப்பட்ட பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பயிற்சியாளர் அருண் லால் உடல்நலன் தேறி, கிரிக்கெட், கொல்கத்தா, என தமது அனுபவங்கள் மறக்க முடியாதவை என்று கூறி இருக்கிறார்.

1983ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தவர் அருண் லால். கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டு வீரர். கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் வர்ணனையாளராக இருந்து, கிரிக்கெட் உடனான தொடர்பை இறுக்கமாக பிடித்துக் கொண்டவர்.

அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொல்கத்தாவில் உள்ள டாடா புற்றுநோய் மருத்துவமனையில் 14 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2 நாட்கள் கழித்து அவர் திரவ உணவை உண்ட போது தான் மருத்துவர்களுக்கு நம்பிக்கை வர கைதட்டி ஆர்ப்பரித்தனர். இது நடந்தது 2016ம் ஆண்டு.

4 வருடங்கள் கழித்து, தனது பொறுப்பின் கீழ் உள்ள வங்காளம் அணி ரஞ்சி டிராபி இறுதிப் போட்டிக்கு எட்டியதால், லாலின் கண்கள் மீண்டும் ஈரமாக இருந்தன. ஒரு பயிற்சியாளராக வெற்றியை அடைவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு தந்தை தனது பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றியைப் பெறுவதைப் பார்ப்பது போன்றது. நான் ஒரு வீரராக ரஞ்சி டிராபியை 1989-90ல் வென்றேன். ஆனால் இந்த அணி சென்று பட்டத்தை வென்றால், நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று கூறினார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது சிலர் சொன்னார்கள், ஒரு 5,6 வார்த்தைகளாவது எழுதி விடுங்கள் என்று,நானும் கட்டாயத்தின் பேரில் அதை செய்தேன். ஆனால் என்ன எழுதினேன் என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அறுவை சிகிச்சைக்கான அந்த இரவு மிகவும் கடினமாக இருந்தது. எனது உடம்பில் எட்டு, ஒன்பது குழாய்கள் மாட்டப்பட்டு இருந்தன.

சுவாசிக்கவில்லை. சிறுநீர் கழிக்கவில்லை. பேசவில்லை. என் வலது கை முடங்கியது. இடது கால் போய்விட்டது, அங்கே நான் சுவாசிக்க முயற்சித்தேன், அது மிகவும் சூடாகத் தோன்றியது.

நான் சுவாசிக்க முயற்சித்தாலும், அது உள்ளே செல்லவில்லை என்பதை நான் உணரவில்லை. ஏனென்றால் அவை உங்கள் மூச்சுக்குழாயில் ஒரு துளை செய்து உங்கள் நுரையீரலுக்குள் ஒரு குழாயை சொருகி வைக்கப்பட்டிருந்தன என்று தமது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

எனக்கு வேலை கிடைக்கும் முன்பு நான் வங்கத்திற்கு சென்றதில்லை. ஆரம்பத்தில் நான் அதை விரும்பவில்லை. பின்னர், மூன்று நான்கு மாதங்களுக்குள், உண்மையில் வங்காளத்தையும் கொல்கத்தாவையும் நேசிக்க ஆரம்பித்தேன்.

என்னைப் பொறுத்தவரை, நகரம் சாலைகள், விளக்குகள் மற்றும் தூய்மை பற்றி மட்டுமல்ல. ஒரு நகரத்திற்கு ஒரு ஆன்மா இருக்க வேண்டும். அதற்கு அரவணைப்பு இருக்க வேண்டும். அது மன்னிப்பதாக இருக்க வேண்டும். அது இங்கு இருக்கிறது என்று கூறினார்.