திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே உள்ள கலசப்பாக்கம் பகுதியில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், அந்த பகுதிகளுக்கு, தனக்கு வாக்களிக்கும்படி பணம் கொடுத்திருந்த  நிலையில், அவர் தோல்வி அடைந்ததால், கொடுத்த பணத்தை வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று திருப்பி கேட்ட சம்பவம் பரபரபையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள  அணியாலை ஊராட்சித் தலைவர் பதவிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த 3 பேர் போட்டியிட்டனர். 3 பேரும் தங்களுக்கு வாக்களிக்கக் கோரி அந்த பகுதி கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் ஓட்டுக்கு  ரூ.500ம், மற்றொருவர் ஓட்டுக்கு ரூ.600 உடன், தங்க மூக்கத்தி கொடுத்துள்ளனர்.

ஆனால், தேர்தல் முடிவில் ஓட்டு ரூ.500 கொடுத்தவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால், கோபமடைந்த ரூ.600 கொடுத்த வேட்பாளர், தனது மனைவியுடன் அந்த பகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்கு சென்று, எனக்குதான் ஓட்டுபோடலியே…  என் பணத்தை திருப்பி தாருங்கள் என்று  கொடுத்த பணம் மற்றும் மூக்குத்தியை வற்புறுத்தி வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதைக்கேள்விப்பட்ட சிலர், தாங்களாகவே முன்வந்து, அவர் கொடுத்த பணத்தையும், மூக்குத்தியையும்  கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர், எதிர்காலத்தை நினைத்து,  ‘எனக்கு ஓட்டு போடவில்லை என்றாலும் பரவாயில்லை. திருப்பி தரவேண்டாம். அடுத்த முறையாவது எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறி, திரும்ப வாங்குவதை தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,வேட்பாளர் மீது பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.