மெழுகுவர்த்தி சூடு கொரோனா கிருமியைக் கொல்லும் : கர்நாடக பாஜக எம் எல் ஏ வின் கண்டு பிடிப்பு

மைசூரு

ர்நாடகா மாநில கிருஷ்ணராஜா தொகுதி பாஜக எம் எல் ஏ ராமதாஸ் இன்று மெழுகுவர்த்தி சூடு கொரோனா கிருமியைக் கொல்லும் எனக் கூறி உள்ளார்.

நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 22 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கு நடத்த வேண்டுகோள் விடுத்தார்.  அன்று மருத்துவர்களைப் பாராட்டக் கைதட்டுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

நேற்று பிரதமர் மோடி வீடியோ மூலம் மக்களுக்குத் தகவல் அளித்தார்.   அப்போது அவர் நாளை அதாவது 5 ஆம் தேதி அன்று இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து விட்டு தீபம் மற்றும் மெழுகுவர்த்திகளை 9 நிமிடத்துக்கு ஏற்றி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இன்று கர்நாடக மாநில கிருஷ்ணராஜா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும் பாஜக தலைவருமான எஸ் ஏ ராமதாஸ், “பிரதமர் மோடி நாளை  மின் விளக்குகளை அணைத்து விட்டு மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மெழுகுவர்த்தி மூலம் உருவாகும் சூடு காரணமாகக் காற்றில் உள்ள கொரோனா கிருமிகள் கொல்லப்படும்.  அதனால் மக்கள் அனைவரும் மோடி கூறியபடி நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி ஏற்றவும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்

ஏற்கனவே மோடியின் மெழுகுவர்த்தி ஏற்றும் கோரிக்கை குறித்து பலரும் சமூக வலைத் தளங்களில் கேலி செய்து வருகையில் கர்நாடக அமைச்சர் கூறியது அதை மேலும் தூண்டுவதாக அமைந்துள்ளது.