சென்னை: நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்ப போதைப்பொருட்களும் ஆன்லைன் மூலம் நூதன முறையில் விற்பனை செய்யப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.  சென்னையில், சமீப காலமாக, ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்யப்பட்ட நிகழ்வுகளும், உணவு டெலிபோல, கஞ்சா விற்பனை செய்த இளம்பெண்ணும் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது, உணவு டெலிவரி பாய் உள்பட 3 பேர் சிக்கி உள்ளனர்.

 சென்னையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்திருந்தார். மேலும், கஞ்சா டெலிவரி செய்பவர்களை பிரத்யேகமாக கண்காணிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 105 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

உணவு விநியோகம் என்ற பெயரில், சிலர் கஞ்சா டெலிவரி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, ரோந்து போலீசார்,  இரண்டு இளைஞர்கள் ஒரு உணவு டெலிவரி முகவருக்கு பார்சல்களைக் கொடுப்பதைக் கண்டறிந்தனர்.

அவர்களை மடக்கிய காவல்துறையினர், அந்த  இளைஞர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் முரண்பாடாக பதில் தெரிவித்ததால், அவர்களை கைது செய்து, காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணயில், அவர்கள் இருவரும் பொறியியல் வல்லுனர்கள் என்பது தெரிய வந்தது. ஓஎம்ஆர் சாலையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனங்களில் டீம் லீடர்களாக இருந்து வருவதாகவும் அவர்களின் பெயர், கே புகாஷ் ஜெர்மைன், (வயது 26) மற்றும் டி.என்.எச்.பி குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த  வி அருண், (25 ) என்பதும்,  உணவு விநியோக சிறுவன் லட்சுமணன் என்பதும் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் லட்சுமணன் கூரியராக செயல்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து,  அவர்களது வீடுகளில் நடத்திய சோதனையில்,  10.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்,   ஆங்காங்கே கஞ்சா விற்பனையானது  நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.