பெங்களூரு:

ரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சோனியாகாந்தி பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அடியோடு அகற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துகொண்ட பிரசாரத்தில் பேசியதற்கு அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி கடுமையாக பதிலடி கொடுத்து பேசினார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி பாரதியஜனதாவுக்கு ஆதரவு திரட்டி  கடந்த ஒரு வாரமாக கர்நாடகாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரசுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கி உள்ளார்.

கர்நாடகத்தில் விஜயபுரா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் சோனியாகாந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பேசிய பேச்சுக்கு பதிலடி கொடுத்து பேசினார்.

அவர் பேசியதாவது,  நரேந்திரமோடி சிறந்த பேச்சாளர்,  ஆனால் அது மக்களுக்கு உணவளிக்காது என்று கடுமையாக சாடினார்.  அனைவருக்கும் வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்த பிரதமர் மோடி கர்நாடகத்தை புறக்கணித்தது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி கேள்வி எழுப்பினார்.

சோனியா காந்தியின் பேச்சு கர்நாடக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர் தேர்தல் பிரசாரம் போகும் இடங்களில் எல்லாம் பெண்கள் அவருக்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

முன்னதாக இன்று காலை விஜயபுராவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, அடையப்போகும் தோல்விக்கான காரணங்களை காங்கிரஸ் கட்சி இப்போதே தேடி வருவதாகவும்,  பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் கையாண்டுள்ளதாகவும், இதனை கர்நாடக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே சோனியா காந்தியின் இன்றைய பேச்சு அமைந்திருந்தது.