“சேரி பிஹேவியர்” காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகத் துவங்கியதில் இருந்தே சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டன.

சமீபத்திய சர்ச்சை, தன்னுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகெண்டிருக்கும் ஓவியாவை, “சேரி பிஹேவியர்” என்று காயத்ரி ரகுராம் காட்டமாக கூறியதுதான்.

“இது சேரி மக்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது” என்று பல தரப்பில் இருந்தும் காயத்ரி ரகுராமுக்கு கண்டனங்கள் குவிகின்றன. நெட்டிசன்கள் கடுமையாக அவரை விமர்சிக்கிறார்கள்.

“காயத்ரியின் பார்ப்பன திமிர் இது” என்பது பலரது விமர்சனமாக இருக்கிறது.

இந்த நிலையில் சிலர், காயத்ரி ரகுராம் மீது வழக்கு தொடர இருப்பதாக ஊடகங்களில் தெரிவித்துவருகிறார்கள்.

வழக்கறிஞர் அருள் துமிலன்

காயத்திரியின் “சேரி பிஹேவியர்” பேச்சுக்காக வழக்கு தொடுக்க முடியுமா என்பதை அறிய, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டி. அருள் துமிலனை தொடர்புகொண்டு பேசினோம்.

அவர், “சேரி என்பதற்கு மக்கள் கூடி வாழும் இடம் என்றுதான் அர்த்தம். பண்டைய தமிழ் இலக்கியங்களிலேயே சேரி என்கிற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பின்னாட்களில்தான், சேரி என்றால் ஏதே தாழ்ந்த பகுதி என்பதாக கட்டமைக்கப்பட்டுவிட்டது. அந்த அர்த்தத்தில்தான் காயத்ரி ரகுராம் கூறியிருப்பார் என்று தோன்றுகிறது. ஆகவே அவர் அப்படி கூறியது தவறுதான்.

பதிலுக்கு, “நீதான் அக்ரஹார பிஹேவியர்” என்றோ, “உனது நடவடிக்கைதான் அக்ரஹார பிஹேவியரோ” என்றோ கேட்டுவிட்டு போக வேண்டியதுதான்.

மற்றபடி இதற்காக வழக்கு தொடுக்க முடியாது. ஏனென்றால்,  ஒரு டி.வி. நிகழ்ச்சியைப் பார்த்து யாரேனும் நேரடியாக பாதிக்கப்பட்டால்தான் வழக்குபோடலாம். “இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பாதிப்பினால் என் மகனோ மகளோ அல்லது அக்கம்பக்கத்தினரோ என்னை மனம் புண்படி பேசினர். அல்லது எனக்கே அந்த நிகழ்ச்சியால் நேரடியாக  பாதிப்பு ஏற்பட்டது” என்றுதான் வழக்கு தொடுக்க முடியும். அதாவது நேரடியாக பாதிக்கப்பட்டால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 200- ன்படி வழக்கு தொடுக்கலாம்.

மற்றபடி பொதுவாக வழக்கு தொடுத்தால் தள்ளுபடி செய்யப்படும். ஊடகங்களில் தனது பெயர் அடிபட வேண்டும் என்பதற்காக சிலர், வழக்கு தொடுப்பதாக கூறுகிறார்கள். அவ்வளவுதான்” என்றார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டி.அருள்துமிலன்.