சென்னை:

கவிஞர் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அறிஞர் ஒருவர் ஆண்டாள் குறித்து கூறியிருந்த கருத்தை சுட்டிக்காட்டியதால் கவிஞர் வைரமுத்து சர்ச்சையில் சிக்கினார். வைரமுத்துவின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘‘ தரம் தாழ்ந்து கவிஞர் வைரமுத்துவை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. ஜனநாயகத்தில் ஒரு கருத்துக்கு மாற்று கருத்து மட்டுமே இருக்க முடியும்.

வைரமுத்து கூறிய கருத்துகளை வைத்து வன்முறையைத் தூண்டும் விதமாக சிலர் விமர்சனங்களை முன் வைப்பதையும், ஆபாச வார்த்தைகளால் வசைபாடுவதையும் ஏற்க முடியாது. அநாகரீகத்திற்கும், வரம்பு மீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை. சிலர் தங்களின் சுயநலனுக்காக வைரமுத்து மீது அராஜகமான கருத்துகளை தெரிவிக்கின்றனர்’’ என்றார்.