டெல்லி:

லைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் ஷாகின் பாக் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், ”போராட்டம் நடத்த உரிமை உண்டு;  ஆனால், அது மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது”  என்றும்,  பொதுச் சாலையில் காலவரையின்றி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்றவற்றுக்கு எதிராக  டெல்லியின் டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் கடந்த2 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அந்த சாலை முடக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்தை அகற்றக்கோரியும், போராட்டத்தில் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது  நீதிபதிகள் கவுல் மற்றும் ஜோசப் ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தியது.

அதைத்தொடர்ந்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், புதியதாக கொண்டு வரப்படும ஒரு  சட்டம் குறித்து மக்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதும், தங்களது கருத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.  அதே சமயம் போராட்டம்  மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது. சாலைகளை மறிக்கக் கூடாது.

இதுபோன்ற பகுதியில் நீண்டகாலமாக போராட்டம் நடத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. நீங்கள் தொடர்ந்து போராட விரும்பினால் அதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.தொடர்ந்து இந்த பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.

தற்போது இந்த வழக்கில் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள்,  இதுதொடர்பாக மத்திய அரசும், சம்பந்தப்பட்டவர்களும் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழழக்கு விசாரணை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்..