மலேசியாவில் உள்ள 350 இந்தியர்களை அழைத்து வர முடியாது : மத்திய அரசு

சென்னை

லேசிய நாட்டில் உள்ள 350 இந்தியர்களை விமானச் சேவை இல்லாததால் அழைத்து வர முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு தற்போது சுமார் 350 பேர் சுற்றுலா விசாவில் சென்றுள்ளனர்.  இந்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் அவர்களால் தாய் நாட்டுக்குத் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் மலேசியா சென்றிருந்த ஒருவர் கடந்த 4 ஆம் தேதி தங்களை இந்திய அரசு அழைத்து வர உதவுமாறு அவருடைய வழக்கறிஞர் முல்லை நாதன் என்பவருக்கு தொலைப்பேசி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

அதையொட்டி வழக்கறிஞர் முல்லை நாதன் ஒரு பொதுநல மனுவைச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அளித்தார்.  அந்த மனுவை நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய சிறப்பு மனு விசாரித்தது.    அமர்வு இது குறித்த அரசின் பதிலைக் கோரி இருந்தது.  மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்துக்குப் பதில் அளித்தது.

அரசின் பதிலில், “தற்போது அனைத்து விதமான பயணிகள் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.  இந்த தடை இந்தோ-வங்க தேச இல்லை, இந்தோ – நேபாள எல்லை மற்றும் இந்தோ – மியான்மர் எல்லை உள்ளிட்ட சாலை போக்குவரத்து மற்றும் சர்வதேச பயணிகள் விமானச் சேவைக்கும் பொருந்தும்.

மேலும் உலகின் பல பகுதிகளில் தற்போது கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகமாக உள்ளதால்  உலகெங்கும் பயணிகள் போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.  எனவே தற்போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களைத் திரும்ப அழைத்து வருவது  மிகவும் அபாயமான செயலாகும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.