தொழுகை நடத்தினால் சொந்த இடமாகிவிடுமா? – உச்சநீதிமன்றத்தில் வாதம்

புதுடெல்லி: முஸ்லீம்கள் தொழுகை நடத்தினார்கள் என்பதற்காகவே அது அவர்களின் இடம் என்றாகிவிடாது எனவும், ஒரு தெருவில் தொழுகை நடத்தினால் அதை அவர்களின் இடம் என்று எப்படி கூறிவிட முடியாதோ, அப்படித்தான் இதுவும் என்ற வாதம் உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்டது.

ராம் லல்லா விராஜ்மன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் இந்த வாதத்தை எடுத்து வைத்தார். அயோத்தி தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது.

“சர்ச்சைக்குரிய இடத்திலுள்ள கட்டுமான மிச்சங்கள் யாவையும் இந்து அடையாளத்தையேக் கொண்டுள்ளன. மேலும், முஸ்லீம்கள் வழிபடும் இடத்தில் மனிதன் அல்லது மிருகங்கள் ஆகியவற்றின் படம் இடம் பெற்றிருக்காது.

சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள அடையாளங்கள் எதுவுமே இஸ்லாமுக்குரியதாக இல்லை. எனவே, தொழுகை நடத்தினார்கள் என்ற ஒற்றை வாதத்தை முன்வைத்து மட்டுமே உரிமைகோர முடியாது. அங்கிருந்த மசூதியை பாபர் கட்டினார் என்றும், ஒளரங்கசீப் காலத்தியது என்றும் மாற்று கருத்துகள் உள்ளன. ஆனால், கோயிலின் சிதைவில் மசூதி எழுப்பப்பட்டது என்பதில் மட்டும் மாற்றுக் கருத்தில்லை” என்பதான வாதங்களை எடுத்து வைத்தார் வழக்கறிஞர் வைத்தியநாதன்.