பெங்களூரு:
டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த பாஜக மத்தியஅமைச்சர் சதானந்தா கவுடா, மாநில அரசின் உத்தரவை மதிக்காமல்,  நேரடியாக வீட்டுக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா லாக்டவுன் 4வது முறையாக மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன.அதன்படி, இன்றுமுதல் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை நிபந்தனைகளுடன் தொடங்கப்பட்டு உள்ளது.

அதன்படி வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் விமான நிலையில் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும், இ பாஸ் பெற வேண்டும், 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என நிபந்தனைகளை  மாநில அரசுகள்  விதித்துள்ளன.
இந்த நிலையில், இன்று விமான சேவை தொடங்கியதும்,   வெளி மாநிலங்களில் சிக்கியிருந்த ஏராளமானோர், இன்று விமானம் மூலம் தங்களது சொந்த மாநிலம் வந்தடைந்தனர்.  அதன்படி, இன்று காலை  டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா, மாநில அரசின் உத்தரவை மதிக்கவில்லை என்றும், அவர் தன்னை  தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
கொரோனா தொற்று பரவலில் தீவிரம் அடைந்து வரும் மாநிலங்களில் ஒன்றான டெல்லியில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும்  கொரோனா சோதனை மற்றும் குவாரன்டைன் கட்டாயம் என அனைத்து மாநில அரசுகளும்  கூறி உள்ளன. டெல்லி உட்பட 5 மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு யார் வந்தாலும் தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது.
இந்த நிலையில், கடந்த 2 மாதமாக டெல்லியில் தங்கியிருந்த மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான சதானந்தா கவுடா இன்று விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தார்.  அவருக்கு கொரோனா ஸ்கினிங் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து, அவர் தனிமைப்படுத்துதல் முகாமுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், அமைச்சர் தானந்தா கவுடா, அதிகாரிகளின் வேண்டுகோளை நிராகரித்து,  முகாமுக்குச் செல்லாமல் நேரடியாக வீட்டுக்கு சென்றார். இது மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியஅமைச்சர் ஒருவரே மாநில அரசின் அறிவிப்பை மதிக்காமல் நடந்துகொண்டது சமுக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.