ஆந்திரர்களை ஆட்டிப்படைக்கும் தலைநகர தோஷம்..!

--

ஜோதிடத்தில் மனிதர்களுக்கு செவ்வாய்தோஷம் மற்றும் நாகதோஷம் உள்ளிட்ட பல்வேறான தோஷ வரையறைகள் உருவாக்கப்பட்டிருப்பது ஒருபுறம் என்றால், அரசியலில் அவர்களுக்கு ‘தலைநகர தோஷம்’ என்பதான ஒன்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இதற்கு வரலாறே சாட்சியம் பகர்கின்றது!

அரசுமுறை, குறிப்பாக அரசாட்சி தோன்றிய பிறகான காலகட்டங்களிலேயே தலைநகரம் என்றதொரு கருத்தாக்கம் வலுப்பெற்றிருக்க வ‍ேண்டும். ஆள்பவன் இருக்குமிடமே ‘தலைநகரம்’.

அரசின் உருவமானது அளவுக்கதிகமாய் உப்புகிறபோது, ஒரு தலைநகரம் அவற்றுக்குப் போதுவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட தலைநகரங்கள் ஒரு ராஜ்ஜியத்திற்கு தேவைப்படுகிறது. அந்த பாணியில், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகரங்களை வைத்து, ஒரு மாபெரும் பேரரசைக் கட்டியாண்ட பெருமையை முதன்முதலில் பெற்றவர்கள் பாரசீகர்களே!

சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே, கிழக்கே சிந்துவிலிருந்து மேற்கே ஆசியா மைனர் மற்றும் வடஆஃப்ரிக்க பகுதிகள் என்று நீண்டிருந்த அவர்களின் பண்டையப் பேரரசை நிர்வகிக்க, பெர்சிபோலிஸ், எக்பாட்டனா, சூஸா மற்றும் பாபிலோன் ஆகிய 4 தலைநகரங்களை அவர்கள் நிறுவினார்கள்.

இந்தியாவை ஆண்ட சுல்தான்களில் முகமது பின் துக்ளக் என்ற மன்னர், தலைநகர தோஷத்தால் அவதிப்பட்டு, வரலாற்றில் இன்றவும் கிண்டலடிக்கப்பட்டு வருவது சற்று கொடுமையான விஷயம்தான்!

உலக வரலாற்றில் சில மன்னர்கள், தங்களின் தேவைக்கேற்ப ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகரங்களை நிறுவி நிர்வகித்து வந்துள்ளதாக பதிவுகள் உண்டு.

இவர்களெல்லாம் தேவைகள் அதிகமாக இருந்ததால், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகரங்களை நிறுவினார்களே ஒழிய, தங்களுக்கான ஒரு தலைநகரம் கூட உருப்படியாக நீடித்து அமையாமல் அவதிப்பட்டவர்கள் அல்லர்..!

இந்த இடத்தில்தான் ஆந்திரர்களின் கதை, விவாதிப்பதற்கு வினோதமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அது கொடுமையானது.

அரசியல் வடிவிலான நவீன இந்தியா 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிறகு, சென்னை மாகாணத்தோடு சேர்க்கப்பட்டிருந்த ஆந்திரர்கள், மொழிவாரியாக தங்களுக்கென்று தனி மாநிலம் வேண்டுமென்ற போராட்டத்தை மற்றையோரை முந்திக்கொண்டு முதலில் துவங்குகின்றனர். பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரத மரணத்தைத் தொடர்ந்து, ஆந்திரர்களின் போராட்டம் வன்முறையாகவும் மாறியது.

தனி மாநிலத்திற்கான போராட்டத்தை நடத்தியபோதே, தலைநகரத்திற்கான போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுத்தார்கள். அவர்களின் சாய்ஸாக அப்போது இருந்தது சென்னை மாநகரம்!

அக்காலகட்டத்தில் சென்னை ராஜ்தானியின் முதல்வராக இருந்தவர் ராஜகோபால ஆச்சாரியார். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இருந்தவர் ஆச்சாரியாருக்கு போட்டி அணி நடத்திய காமராஜர். சென்னை மாநகர மேயராக பதவி வகித்தவர் காங்கிரசில் காமராஜர் அணியைச் சேர்ந்த செங்கல்வராயன். மற்றொரு பக்கம் மபொசி போன்றவர்கள்.

இதில் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இவர்களில் யாருமே சென்னையை ஆந்திரர்களுக்கு விட்டுக்கொடுக்க இம்மியளவும் மசியவில்லை என்பதுதான்! முழு சென்னை கிடைக்காதா? என்ற ஏமாற்றத்தில், கூவத்தை மையமாக வைத்து சென்னையைப் பிரித்து, வடபகுதியையேனும் தங்களுக்குத் தாருங்கள் என்று கொக்கிப் போட்டனர் அவர்கள்.

பல்வேறு நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று கொடிநாட்டி பெருமை சேர்த்தவர்கள் என்று எப்போதும் புகழப்படும் பல தமிழ் மன்னர்கள், தாம் சென்ற இடங்களில் கொடிகளையும் கல்வெட்டுகளையும் மட்டுமே நட்டு, தமிழ் மக்களுக்கு எந்தப் புண்ணியமும் இல்லாமல் செய்து, வெட்டிப் பெருமையாய் வீண் வரலாற்றில் பதிந்துபோன நிலையில், ஒருமுறை தமிழகத்திற்கு படையெடுத்து வந்தாலும், ஒட்டுமொத்த தமிழகத்தையே 70க்கும் மேற்பட்ட பாளையங்களாகப் பிரித்து(பச்சைத் தமிழர் அரியநாத முதலியார் ஆலோசனையின்படி), அதில் 50க்கும் மேற்பட்ட பாளையங்களை தம் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி நடத்தி, இன்றளவும் தமிழகத்தில் வலுவான செல்வாக்கை செலுத்தும் ஆந்திரர்களிடம் பாதி சென்னையைக் கொடுத்தால், மீதியின் கதி என்னவாகும் என்ற புரிதல் அப்போது பலருக்கும் இருந்திருக்கலாம்!

முழு சென்னை போய், பாதி சென்னையாவது கிடைக்குமென்ற நப்பாசைக் கொண்டிருந்தவர்களுக்கு, சென்னை தற்காலிக தலைநகரமாகக்கூட இருக்காது என்ற நிராசையே ஏற்பட்டது. ஆம், சென்னையை சிறிதுகாலம் தற்காலிக தலைநகரமாக ஆந்திரர்கள் பகிர்ந்துகொள்வதற்குக்கூட தமிழ்நாடு அப்போது அனுமதிக்கவில்லை.

இந்தியாவில் மொழிவாரி மாநிலப் பிரிவினைக்கு வித்திட்ட இவர்கள், 1953ம் ஆண்டிலேயே தாங்கள் விரும்பிய சென்னை இல்லாமல் தனித்துப்போன பிறகு, கர்ணூலை தலைநகராக அமைத்துக்கொண்டனர். (ஆனாலும், சென்னையின் மீதான தங்களின் காதலை, ஆந்திரர்களில் பலர் அவ்வப்போது வெளிப்படுத்த தயங்குவதில்லை).

ஐதராபாத் சமஸ்தானத்தின் தெலுங்கு பேசும் பகுதி ஆந்திரத்துடன் 1956ம் ஆண்டு இணைக்கப்படும் வரை அது தொடர்ந்தது.

அப்போதுதான் ஆந்திரர்களின் கைகளுக்கு தக்காணப் பிராந்தியத்தின் அடையாளமாகிய ஐதராபாத் வந்து சேர்கிறது. ஆனால், அதுவும் லேசில் கிடைத்துவிடவில்லை. ஐதராபாத் சமஸ்தானத்தின் கன்னடப் பகுதிகள் மற்றும் மராட்டியப் பகுதிகள் சம்பந்தப்பட்ட அந்தந்த மாநிலங்களுடன் பிரச்சினையின்றி இணைந்துவிட்ட பிறகும், ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரத்துடன் இணைய, தெலுங்கானா பகுதியின் பின்தங்கிய தெலுங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சமூகரீதியாக பின்தங்கிய தங்களை, பிற பகுதிகளின் ஆந்திரர்கள் ஆதிக்கம் செலுத்தி அமுக்கி விடுவார்கள் என்ற பயம்தான் அது. (அப்போது எழுந்த எதிர்ப்பு, கடைசியில் 2014ம் ஆண்டின் தனிமாநில பிரிப்பில் வந்தே அடங்கியது என்பது தனி வரலாறு).

எப்படியோ சமாதானப்படுத்தி, ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டது தெலுங்கானா. தாங்கள் பெரிதும் ஆசைப்பட்ட, பிரிட்டிஷ்காரர்கள் பெற்ற செல்லக் குழந்தையான சென்னை மாநகரம் கையிலேயே சிக்காமல் போன ஏமாற்றத்தில், கர்ணூலை தலைநகராக வைத்துக்கொண்டவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாதுதானே..!

ஐதராபாத் போன்ற பிரசித்த பெற்ற நகரம் தங்கள் கைகளுக்கு வந்தவுடன், ஆனந்தமாக வரவேற்றார்கள் ஆந்திரர்கள்! தெலுங்கானா அதிகாரப்பூர்வமாக இணைந்ததே தவிர மனப்பூர்வமாக இணையவில்லை. ராயலசீமா மற்றும் கடற்கரை ஆந்திரர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, தெலுங்கானா தனிமாநில போராட்டங்கள் தொடர்ந்து பெரியளவில் நடைபெற்று வந்தன.

இதனிடையே, சென்னையை மையம் கொண்டிருந்த தெலுங்கு சினிமா எனும் புயலை, எப்படியேனும் ஐதராபாத்தின் பக்கம் நகர்த்திச் சென்றுவிட வேண்டுமென்ற பகீரத முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெற்றிபெற்றன.

கடந்த 1956ம் ஆண்டுமுதல் தாங்கள் பார்த்து பார்த்து பராமரித்து வளர்த்துவந்த ஐதராபாத், தெலுங்கானா போராட்டம் வெற்றிபெற்றால் கையைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் ஆந்திரர்களின் மனதில் எப்போதும் இருக்கத்தான் செய்தது.

துரோகமிழைக்கப்பட்டும், ஏமாற்றப்பட்டும், கடுமையாக நசுக்கப்பட்டும் வந்த தெலுங்கானா தனிமாநில கோரிக்கைக்கு, ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியினுடைய மரணத்தின் மூலம் ஒரு விமோசனம் கிடைத்தது.

அதேசமயத்தில், ஐதராபாத்தை கொஞ்சி மகிழ்ந்த ஆந்திரர்களின் நிலையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆந்திராவுக்கென்று ஒரு நிரந்திர தலைநகரம் அமைக்கப்படும் வரை, பத்தாண்டுகளுக்கு ஐதராபாத்தை தற்காலிக தலைநகராகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர் ஆந்திரர்கள்.

சரி, அதன்பிறகான நாட்களுக்கு வருவோம். தெலுங்கானாவை இழந்த ஆந்திரத்தின் முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு. அவர், விஜயவாடாவின் அருகே, கிருஷ்ணா நதிக்கரையில் அமராவதி என்ற பெயரில் ஒரு சிறப்புவாய்ந்த(அவரின் ஆசைப்படி) தலைநகரை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆந்திரர்களைப் பொறுத்தமட்டில் அது 4வது தலைநகரம்!

ஆனால், 2019ல் ஆட்சி மாறியதும் அமராவதி தொடர்பான காட்சியும் மாறிவிட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியாலோ அல்லது வேறு காரணங்களாலோ, புதிதாக அமைந்த ஜெகன்மோகனின் அரசு அமராவதியை விரும்பவில்லை. ஆனால், ஒரேடியாக கைகழுவிடவும் முடியாமல், வேறுவிதமான முடிவை எடுத்துள்ளது.

ஆந்திராவுக்கு மொத்தம் 3 தலைநகரங்களை அறிவித்துள்ளது ஜெகன்மோகன் அரசு. சட்டசபை தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள அமராவதியுடன் சேர்ந்து, நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டணமும், நீதித்துறை தலைநகராக கர்ணூலும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. (திருப்பதியை ஆன்மீக தலைநகராக அறிவிக்க வேண்டுமென்ற ஒரு புதிய கோரிக்க‍ை முளைத்திருப்பதைப் பற்றி இங்கே நாம் பேச வேண்டாம்).

ஜெகன்மோகன் அரசின் இந்தத் திட்டம் புதுமையான ஒன்றல்லதான். தமிழ்நாட்டில்கூட, சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய 4 நகரங்களையும் ஒவ்வொரு பிரிவுக்கென தனித்தனி தலைநகரங்களாக ஆக்க வேண்டுமென்ற கோரிக்கை பல நாட்களாக இருந்துவரும் ஒன்றுதான். (எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சிக் காலத்தில், தமிழக தலைநகரை சென்னையிலிருந்து, மத்தியப் பகுதியான திருச்சிக்கு மாற்றும் முயற்சிகள் தொடங்கப்பட்டு கைவிடப்பட்ட நிகழ்வானது நினைவுகளில் ஒட்டி நிற்கும் ஒன்று).

தங்களுக்கென்று ஒரு தனியான மொழிவாரி மாநிலத்தை நாட்டிலேயே முதன்முதலாக பெற்றாலும், அதனையடுத்த 66 ஆண்டுகளாக ஆந்திரர்களின் தலைநகரப் போராட்டம் மட்டும் ஓயாமல் தொடர்ந்து கொண்டுள்ளது.

மும்பையை எப்படியேனும் தமதாக்கிட வேண்டுமென்ற முயற்சிகளில் ஈடுபட்ட குஜராத்திகள், அம்முயற்சி கைக்கூடவில்லை என்றவுடன், அகமதாபாத்தை வைத்துக்கொண்டு திருப்தியடைந்துவிட்டனர். சண்டிகர் என்ற ஒரு பொதுவான தலைநகருடன் பிரச்சினையின்றி சென்றுகொண்டுள்ளது பஞ்சாபிகள் மற்றும் ஹரியானா மக்களின் வாழ்க்கை! முந்தைய ஒருங்கிணைந்த காஷ்மீரில்கூட 6 மாதங்கள் ஸ்ரீநகரும், 6 மாதங்கள் ஜம்முவும் தலைநகராக இருந்ததில் எந்தப் பிரச்சினையுமில்லை.

தற்போது, தலைநகரம் தொடர்பான ஒரு புதிய முயற்சியில் ஆந்திரர்கள் தங்களின் பயணத்தைத் தொடர வேண்டியுள்ளது. இந்தப் பயணம் அவர்களுக்கு நீண்டகால நோக்கில் வெற்றிகரமானதாக அமையுமா? அல்லது இதிலும் தடங்கல்கள் ஏற்பட்டு இடற வேண்டிய நிலை ஏற்படுமா? என்பது காலத்தின் கையில்..!

இவர்கள் விஷயத்தில் தலைநகர தோஷம் என்பது தனிமனிதன் என்ற நிலையைத் தாண்டி ஒரு இனத்தின் சிக்கலாக பரிணாமம் பெற்றுள்ளது!

தங்களது அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில், நிலவுடைமை, வர்த்தகம் மற்றும் அரசியல்ரீதியாக ஆதிக்கம் செலுத்த முடிந்த ஆந்திரர்களால், தங்களுக்கான ஒரு ‘தலைநகரம்’ என்ற தேடலில் மட்டும் இன்னும் வெற்றியைக் காண முடியவில்லை என்பது நிச்சயம் ஒருவகையான வரலாற்று முரண்தான்..!

– மதுரை மாயாண்டி