டெல்லி: நாட்டில் உள்ள 21 நகரங்களில் தலைநகர் டெல்லியில் குழாய்களில் வரும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


தலைநகர் டெல்லியை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கிய காற்று மாசு விவகாரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த சூழ்நிலையில், குடிநீரும் பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய அரசின் ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அரசின் தரக்கட்டுப்பாடு நிறுவனம் நாட்டில் உள்ள 21 நகரங்களில் உள்ள குழாய் குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதன் ஆய்வு முடிவுகளை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வெளியிட்டு இருக்கிறார்.


அந்த முடிவுகளின் படி மிக மோசமான குடிநீர், அருந்துவதற்கு ஏற்றதல்ல என்ற அடையாளத்தை தலைநகர் டெல்லியில் குழாய்களில் இருந்து வரும் குடிநீர். பெற்றிருக்கிறது.
டெல்லி நகரத்துடன் சண்டிகர், காந்திநகர், மும்பை, கொல்கத்தா, பாட்னா, பெங்களூரு, ஜம்மு, லக்னோ, சென்னை மற்றும் டேராடூன் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் தரமானது மொத்தம் 28 வகைகளில் பரிசோதிக்கப்பட்டது.


டெல்லி, சென்னை என 15 நகரங்களில் எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகள் போதிய தரத்தகுதியை பெறவில்லை. அதாவது, அவை குடிப்பதற்கு உகந்தது அல்ல. குறிப்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் இல்லத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் உள்பட 11 மாதிரிகளும் தரச்சோதனையில் தோல்வி அடைந்திருக்கின்றன.
அந்த குடிநீர் அசுத்தமாக, தரமின்றி இருந்திருக்கிறது. மற்ற நகரங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளிலும், ரசாயனங்களின் அளவு அதிகமாக காணப்பட்டுள்ளது. இருப்பதிலேயே, மும்பை நகரத்தில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகள் தூய்மையான நிலையில் உள்ளது.


இது குறித்து மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறி இருப்பதாவது: மத்திய தரக்கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ள அளவீடுகளின் படி, குடிநீரின் தரம் இருக்க வேண்டும். ஆய்வு முடிவுகளை புறந்தள்ள முடியாது, அனைத்து விதமான உரிய நடவடிக்கைகளும் மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.