டைட்டானிக் கப்பல் கேப்டன் போல பேசுகிறார் அமைச்சர் ஹர்ஷவர்தன்: ராகுல் காந்தி டிவிட்

டெல்லி:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில்,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், கொரோனா வைரஸ் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று சாதாரணமாக கூறி வருகிறார். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுவது, டைட்டானிக் கப்பல் கேப்டன் கூறுவது போல, கப்பல் மூழ்காது,  பயப்பட வேண்டாம் என்று பயணிகளுக்குச் சொல்வது போல உள்ளது என்று சாடியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. விமான நிலையங்களிலும் கொரோனா தடுப்பு சோதனை நடத்தப்படுவதாக தெரிவித்தன.

ஆனால், இத்தாலியில் இருந்து இந்தியா சுற்றுலா வந்த 30 பயணிகளில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது, சுமார் ஒரு வார காலத்திற்கு பின்பு இப்போதுதான் தெரிய வந்துள்ளது. இது பெரும் பரபரப்பையும், மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

தற்போதைய நிலையில், இந்தியாவில் இத்தாலி சுற்றுலாப்பயணிகள் 15 பேர் உள்பட 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறி உள்ளார். இவர்களில் கேரளாவைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து உள்ளனர். மற்ற 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அமைச்சரின் பதிலுக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய எம்.பியுமான ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில்,  ‘கரோனா வைரஸ் நெருக்கடியைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகிறார். அவர் கூறுவது, டைட்டானிக் கப்பல் மூழ்காது; யாரும் பயப்பட வேண்டாம் என்று கேப்டன் தனது பயணிகளுக்குச் சொல்வது போல இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு ஒரு நிலையான, உறுதியான திட்டத்தை வழங்க வேண்டிய நேரம் இது’ என்றும் பதிவிட்டுள்ளார்.