சென்னை:
தோழிகளுடன்  போதையில் காரை ஓட்டிய   இளம்பெண் சாலையோரம் நின்றிருந்தவர் மீது மோதியதில் அந்த நபர் பலியானார்.
சென்னை, சேத்துப்பட்டு, லாமேக் அவென்யூவை சேர்ந்த  வில்டன் ரோலன்  தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளராக உள்ளார். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 26 ) நந்தம்பாக்கத்தில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தோழிகள், எழும்பூரை சேர்ந்த சோனி ஜென்சுஷ்மா, 30, பூர்ணிமா, 29. இவர்களும், ஐ.டி., நிறுவன ஊழியர்கள்.
இவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.
ஐஸ்வர்யாவின் தாயார் பெயரில் உள்ள ஆடி காரில் (டி.என்:01 எ.டபிள்யூ 1403)  அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று சினிமா பார்த்தனர். பிறகு நள்ளிரவில் சாலையோரம் காரை நிறுத்தி, ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த மதுவை காருக்குள்ளே அமர்ந்து அருந்தினர்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

பிறகு, சோழிங்கநல்லுார் பகுதியில் உள்ள, ஒரு தங்கும் விடுதிக்கு கிளம்பினர்.   முழு போதையில் இருந்த ஐஸ்வர்யா காரை ஓட்டினார். போதையில் கார் தாறுமாறாக ஓடியது.  அதிகாலை, 4:25 மணிக்கு, தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகே கார் சென்ற போது சாலையோரம் நின்றிருந்த முனுசாமி, ( வயது 45)  என்பவர் மீது  கார் மோதியது. கார் மோதிய வேகத்தில் 15 அடி உயரத்தில் துாக்கி வீசப்பட்ட முனுசாமி, சம்பவ இடத்திலேயே பலியானார்
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை, முனுசாமியின் நண்பர்கள், 1 கி.மீ., துாரத்துக்கு வாகனத்தில் துரத்திச் சென்று மடிக்கிப் பிடித்தனர்.  பிறகு  காரில் இருந்தவர்களை, கிண்டி போக்குவரத்து குற்றப் புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த கார்.
அந்த கார்.

மருத்துவப் பரிசோதனைக்கு பின், ஐஸ்வர்யா போதையில் கார் ஓட்டியதாலேயே உயிர் பலி நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தோழிகளை, காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
விபத்தில் இறந்த, திருவான்மியூர், காமராஜர் நகரை சேர்ந்த முனுசாமிக்கு, மனைவி கோவிந்தம்மாள்; கார்த்திக், 15, என்ற மகனும், திவ்யா, 11, என்ற மகளும் உள்ளனர்.
சமீபகாலமாக போதையில் வாகனத்தை ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு பலியாவது சென்னையில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.