திருப்பதி:

திருப்பதி வெங்கடேசப்பெருமாளை தரிசிக்க திருமலை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு தெலுங்கு கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது, அமித்ஷா உடன் வந்த பாஜகவினரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

கர்நாடகாவில் நாளை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் கடந்த ஒரு மாதமாக, அங்கு தனி வீடு எடுத்து பிரசாரம் மேற்கொண்டு வந்த பாஜக தலைவர் அமித்ஷா நேற்று பிரசாரம் முடிவடைந்த நிலையில், இன்று ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாளை சந்திக்க வந்தார்.

தெலுங்குதேசம் போராட்டம்

இதை அறிந்த தெலுங்கு தேசம் கட்சியினர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. அமித்ஷாவை பின் தொடர்ந்து சென்ற பாஜக ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களால் அமித்ஷாவின் பின்னால் வந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

மோடியை திரும்பி போ என்ற கோஷத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

பலத்த பாதுகாப்புடன் திருப்பதி கோவிலில் சாம்பி கும்பிட்ட அமித்ஷாவுக்கு திருப்பதி தேவஸ்தானம் போர்டு சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக சட்டமன்ற தேர்தலின்போது அறிவித்த பாஜ, தற்போது சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று கூறியதால், இரு கட்சிகளுக்கும் இடையே உறவு முறிந்தது. அதைத்தொடர்ந்து பாஜ மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.